திருவருட்பால்- ஔவையார்

திருவருட்பால்

2.1 அருள்பெறுதல்.
அருளினா லன்றி யகத்தறி வில்லை
அருளின் மலமறுக்க லாம். (101)
இருளைக் கடிந்தின் றிறைவ னருளால்
தெருளுஞ் சிவசிந்தை யாம். (102)
வாய்மையாற் பொய்யா மனத்தினால் மாசற்ற
தூய்மையா மீச னருள். (103)
ஒவ்வகத்து ணின்ற சிவனருள் பெற்றக்கால்
அவ்வகத்து ளானந்த மாம். (104)
உன்னுங் கரும முடிக்கலா மொள்ளிதாய்
மன்னு மருள்பெற்றக் கால். (105)
எல்லாப் பொருளு முடிக்கலா மீசன்றன்
தொல்லை யருள் பெற்றக்கால். (106)
சிந்தையு ணின்ற சிவனருள் பெற்றக்கால்
பந்தமாம் பாச மறும் (107)
மாசற்ற கொள்கை மதிபோலத் தான்றோன்றும்
ஈசனருள் பெற்றக்கால். (108)
ஆவாவென் றோதி யருள்பெற்றார்க் கல்லாது
தாவாதோ ஞான வொளி. (109)
ஒவாச் சிவனருள் பெற்றா லுரையின்றித்
தாவாத வின்பந் தரும். (110)
2.2 நினைப்புறுதல்
கருத்துறப் பார்த்துக் கலங்காம லுள்ளத்
திருத்திச் சிவனை நினை. (111)
குண்டலியி னுள்ளே குறித்தரனைச் சிந்தித்து
மண்டலங்கள் மேலாகப் பார். (112)
ஒர்மின்கள் சிந்தையி லொன்றச் சிவன்றன்னைப்
பார்மின் பழம்பொருளே யாம். (113)
சிக்கெனத் தேர்ந்துகொள் சிந்தையி லீசனை
மிக்க மலத்தை விடு. (114)
அறிமின்கள் சிந்தையி லாதாரத் தைச்சேர்ந்
துறுமின்க ளும்முளே யோர்ந்து. (115)
நிற்றம் நினைந்திரங்கி நின்மலனை யொன்றுவிக்கில்
முற்று மவனொளியே யாம். (116)
ஓசையுணர்ந் தங்கே யுணர்வைப் பெறும்பரிசால்
ஈசன் கருத்தா யிரு. (117)
இராப்பக லன்றி யிருசுடர்ச் சிந்திக்கில்
பராபரத்தோ டொன்றலு மாம். (118)
மிக்க மனத்தால் மிகநினைந்து சிந்திக்கில்
ஒக்கச் சிவனுருவ மாம். (119)
வேண்டுவார் வேண்டும் வகைதான் விரிந்தெங்குங்
காண்டற் கரிதாஞ் சிவம். (120)
2.3 தெரிந்துதெளிதல்.
தேறித் தெளிமின் சிவமென்றே யுள்ளுணர்வில்
கூறிய பல்குணமு மாம். (121)
உண்டில்லை யென்னு முணர்வை யறிந்தக்கால்
கண்டில்லை யாகுஞ் சிவம். (122)
ஒருவர்க் கொருவனே யாகுமுயிர்க் கெல்லாம்
ஒருவனே பல்குணமு மாம். (123)
எல்லார்க்கு மொன்றே சிவமாவ தென்றுணர்ந்த
பல்லோர்க்கு முண்டோ பவம். (124)
ஆயுமிரவியு மொன்றே யனைத் துயிர்க்கும்
ஆயுங்கா லொன்றே சிவம். (125)
ஓவாத தொன்றே பலவா முயிர்க்கெல்லாந்
தேவான தென்றே தெளி. (126)
தம்மை யறியாதார் தாமறிவோ மென்பதென்
செம்மையா லீசன் றிறம். (127)
எல்லா வுலகத் திருந்தாலு மேத்துவர்கள்
நல்லுலக நாத னடி. (128)
உலகத்திற் பட்ட வுயிர்க்கெல்லா மீசன்
நிலவுபோ னிற்கும் நிறைந்து. (129)
உலகத்தில் மன்னு முயிர்க்கெல்லா மீசன்
அலகிறந்த வாதியே யாம். (130)
2.4 கலைஞானம்.
சத்தியாஞ் சந்திரனைச் செங்கதிரோ னூடுருவில்
முத்திக்கு மூல மது. (131)
அயனங்கொள் சந்திரனா லாதித்த னொன்றில்
நயனமா முத்திக்கு வீடு. (132)
அஞ்சாலு மாயா தறம்பொரு ளின்பமுந்
துஞ்சாதவர் துறக்கு மாறு. (133)
ஈசனோ டொன்றி லிசையாப் பொருளில்லை
தேசவிளக் கொளியே யாம். (134)
தாஞ்செய் வினையெல்லாந் தம்மையற வுணரில்
காஞ்சனமே யாகுங் கருத்து. (135)
கூடக மான குறியெழுத்தைத் தானறியில்
வீடக மாகும் விரைந்து. (136)
வீடகமாக விழைந் தொல்லை வேண்டுமேல்
கூடகத்திற் சோதியோ டொன்று. (137)
பூரித்து நின்ற சிவனைப் புணரவே
பாரித்த தாகுங் கருத்து. (138)
இரேசக மாற்றி யிடையறாதே நிற்கில்
பூரிப்ப துள்ளே சிவம். (139)
சிந்தையில் நின்ற நிலைவிசும்பிற் சாக்கிரமாம்
சந்திரனிற் றோன்று முணர்வு. (140)
2.5 உருவொன்றிநிற்றல்.
எள்ளகத்தே தெண்ணெ யிருந்ததனை யொக்குமே
உள்ளகத் தீச னொளி. (141)
பாலின்க ணெய்போற் பரந்தெங்கு நிற்குமே
நூலின்க ணீச னுழைந்து. (142)
கரும்பினிற் கட்டியுங் காய்ப்பலி னெய்யும்
இரும்புண்ட நீரு மியல்பு. (143)
பழத்தி னிரதம்போற் பரந்தெங்கு நிற்கும்
வழுத்தினா லீச னிலை. (144)
தனுவொடு தோன்றுமே தானெல்லா மாகி
யணுவதுவாய் நிற்கு மது. (145)
வித்து முளைபோல் விரிந்தெங்கு நிற்குமே
ஒத்துளேநிற்கு முணர்வு. (146)
அச்ச மாங்கார மகத்தடக்கினாற் பின்னை
நிச்சயமா மீச னிலை. (147)
மோட்டினீர் நாற்ற முளைமுட்டை போலுமே
வீட்டுளே நிற்கு மியல்பு. (148)
நினைப்பவர்க்கு நெஞ்சத்துள் நின்மலனாய் நிற்கும்
அனைத்துயிர்குந் தானா மவன். (149)
ஓசையி னுள்ளே யுதிக்கின்ற தொன்றுண்டு
வாசமலர் நாற்றம்போல் வந்து. (150)
2.6 முக்திகாண்டல் மனத்தோ டுறுபுத்தி யாங்காரஞ் சித்தம்
அனைத்தினு மில்லை யது. (151)
வாக்குங் கருத்து மயங்குஞ் சமயங்கள்
ஆக்கிய நூலினு மில். (152)
உருவமொன் றில்லை யுணர்வில்லை யோதும்
அருவமுந் தானதுவே யாம். (153)
தனக்கோ ருருவில்லை தானெங்கு மாகி
மனத்தகமாய் நிற்கு மது. (154)
பெண்ணா ணலியென்னும் பேரொன் றிலதாகி
விண்ணாகி நிற்கும் வியப்பு. (155)
அனைத்துருவ மாய வறிவை யகலில்
தினைத்துணையு மில்லை சிவம். (156)
துனிமுகத்துக் காதியாத் துன்னறி வின்றி
அணிதா ரிரண்டு விரல் (157)
மயிர்முனையிற் பாதி மனத்தறி வுண்டேல்
அயிர்ப்புண்டங் காதி நிலை. (158)
தற்பர மான சதாசிவத்தோ டொன்றில்
உற்றறி வில்லை யுயிர்க்கு. (159)
உறக்க முணர்வு பசிகெடப் பட்டால்
பிறக்கவும் வேண்டா பிறப்பு. (160)
2.7 உருபாதீதம்.
கருவின்றி வீடாங் கருத்துற வேண்டில்
உருவின்றி நிற்கு முணர்வு. (161)
பிறத்தலொன் றின்றிப் பிறவாமை வேண்டில்
அறுத்துருவ மாற்றி யிரு. (162)
உருவங்க ளெல்லா மறுத்தற மாற்றில்
கருவேது மில்லை தனக்கு. (163)
கறுப்பு வெளுப்பு சிவப்புறு பொன்பச்சை
யறுத்துருவ மாற்றி யிரு. (164)
அனைத்துருவ மெல்லா மறக்கெடுத்து நின்றால்
பினைப்பிறப் பில்லையாம் வீடு. (165)
நினைப்பு மறப்பற்று நிராகரித்து நின்றால்
தனக்கொன்று மில்லை பிறப்பு. (166)
குறித்துருவ மெல்லாங் குறைவின்றி மாற்றில்
மறித்துப் பிறப்பில்லை வீடு. (167)
பிதற்று முணர்வை யறுத்துப் பிரபஞ்ச
விகற்ப முணர்வதே வீடு. (168)
பிறப்பறுக்க வீடாம் பேருவமை யின்றி
அறுத்துருவ மாற்றியிரு. (169)
ஓசை யுணர்வோ டுயிர்ப்பின்மை யற்றக்கால்
பேசவும் வேண்டா பிறப்பு. (170)
2.8 பிறப்பறுதல்.
தன்னை யறியு மறிவுதனைப் பெறில்
பின்னைப் பிறப்பில்லை வீடு. (171)
அறம் பாவமாயு மறிவுதனைக் கண்டால்
பிறந்துழல வேண்டா பெயர்ந்து. (172)
சிவனுருவந் தானாய்ச் செறிந்தடங்கி நிற்கில்
பவநாச மாகும் பரிந்து. (173)
உறக்க முணர்வோ டுயிர்ப்பின்மை யற்றால்
பிறப்பின்றி வீடாம் பரம். (174)
நினைப்பு மறப்பு நெடும்பசியு மற்றால்
அனைத்துலகும் வீடா மது. (175)
உடம்பிரண்டுங் கெட்டா லுறுபய னொன்றுண்டு
திடம்படு மீசன் றிறம். (176)
தன்னை யறிந்து செறிந்தடங்கித் தானற்றால்
பின்னைப் பிறப்பில்லை வீடு. (177)
மருளன்றி மாசறுக்கின் மாதூ வெளியாய்
இருளின்றி நிற்கு மிடம். (178)
விகாரங் கெடமாற்றி மெய்யுணர்வு கண்டால்
அகாரமாங் கண்டீ ரறிவு. (179)
சிந்தை யாங்காரஞ் செறிபுல னற்றக்கால்
முந்தியே யாகுமாம் வீடு. (180)
2.9 தூயவொளிகாண்டல்.
தோன்றிய தெல்லாந் தொடக்கறுத்துத் தூய்வெளியாய்த்
தோன்றியக்காற் றூய வொளி. (181)
தெளிவாய தேச விளக்கொளியைக் காணில்
வெளியாய வீடதுவே யாம். (182)
மின்போ லுருவ விளக்கொளிபோல் மேற்காணில்
முன்போல மூலம் புகும். (183)
பளிங்கு வலம்புரி பானிரத்த தாகில்
துளங்கொளியாந் தூய நெறி. (184)
சங்கு நிறம்போற் றவள வொளிகாணில்
அங்கையி னெல்லியே யாம். (185)
துளங்கிய தூண்டா விளக்கொளி காணில்
விளங்கிய வீடாம் விரைந்து. (186)
மின்மினி போன்ற விளக்காகத் தான்றோன்றில்
அன்னப் பறவையே யாம். (187)
உள்ளொளி தோன்றி லுணரி லருளொளி
அவ்வொளி யாதி யொளி. (188)
பரந்த விசும்பிற் பரந்த வொளிகாணில்
பரம்பரமே யாய வொளி. (189)
ஆதி யொளியாகி யாள்வானுந் தானாகி
ஆதியவ னுருவ மாம். (190)
2.10 சதாசிவம்.
பத்துத் திசையும் பரந்த கடலுலகும்
ஒத்தெங்கும் நிற்குஞ் சிவம். (191)
விண்ணிறைந்து நின்று விளங்குஞ் சுடரொளிபோல்
உண்ணிறைந்து நிற்குஞ் சிவம். (192)
ஆகமுஞ் சீவனு மாசையுந் தானாகி
ஏகமாய் நிற்குஞ் சிவம். (193)
வாயுவாய் மன்னுயிராய் மற்றவற்றி னுட்பொருளாய்
ஆயுமிடந் தானே சிவம். (194)
எண்ணிறைந்த யோனி பலவாய்ப் பரந்தெங்கும்
உண்ணிறைந்து நிற்குஞ் சிவம். (195)
ஒன்றேதா னூழி முதலாகிப் பல்லுயிர்க்கும்
ஒன்றாகி நிற்குஞ் சிவம். (196)
மூலமொன் றாகி முடிவொன்றா யெவ்வுயிர்க்குங்
காலமாய் நிற்குஞ் சிவம். (197)
மண்ணிற் பிறந்த வுயிர்க்கெல்லாந் தானாகி
விண்ணகமே யாகுஞ் சிவம். (198)
தோற்றமது வீடாகித் தொல்லைமுத லொன்றாகி
ஏத்தவரு மீச னுளன். (199)
நிற்கும் பொருளும் நடப்பனவுந் தானாகி
உற்றெங்கும் நிற்குஞ் சிவம். (200)
திருவருட்பால் முற்றிற்று.