தன்பால் ஔவையார்

தன்பால்.

3.1 குருவழி.
தன்பா லறியுந் தவமுடையார் நெஞ்சகத்துள்
அன்பா யிருக்கு மரன். (201)
சிந்தை சிவமாகக் காண்பவர் சிந்தையில்
சிந்தித் திருக்குஞ் சிவம். (202)
குருவி னடிபணிந்து கூடுவ தல்லார்க்
கருவமாய் நிற்குஞ் சிவம். (203)
தலைப்பட்ட சற்குருவின் சன்னிதியி லல்லால்
வலைப்பட்ட மானதுவே யாம். (204)
நெறிபட்ட சற்குரு நேர்வழி காட்டில்
பிறிவற் றிருக்குஞ் சிவம். (205)
நல்லன நூல்பல கற்பினுங் காண்பரிதே
எல்லை யில்லாத சிவம். (206)
நினைப்பு மறப்பு மில்லாதவர் நெஞ்சந்
தனைப் பிரியாது சிவம். (207)
ஒன்றி லொன்றாத மனமுடையா ருடல்
என்று மொன்றாது சிவம். (208)
நாட்டமில்லாத விடம் நாட்ட மறிந்தபின்
மீட்டு விடாது சிவம். (209)
பஞ்சமா சத்த மறுப்பவர்க் கல்லா அல்
அஞ்ச லென்னாது சிவம். (210)
3.2 அங்கியிற்பஞ்சு. அங்கியிற் பஞ்சுபோ லாகாயத்தே நினையில்
சங்கிக்க வேண்டா சிவம். (211)
மெய்ப்பா லறியாத மூடர்த நெஞ்சத்தின்
அப்பால தாகுஞ் சிவம். (212)
நெஞ்சகத்து ணோக்கி நினைப்பவர்க் கல்லாஅல்
அஞ்ச லென்னாது சிவம். (213)
பற்றிலா தொன்றினைப் பற்றினா லல்லது
கற்றதனா லென்ன பயன். (214)
தம்மை யறிவாரைத் தாமறிந்து கொண்டபின்
தம்மை யறிவரோ தான். (215)
அசபையறிந் துள்ளே யழலெழ நோக்கில்
இசையாது மண்ணிற் பிறப்பு. (216)
இமையாத நாட்டத் திருந் துணர்வாருக்
கமையாத வானந்த மாம். (217)
துரியங் கடந்த சுடரொளியைக் கண்டால்
மரணம் பிறப்பில்லை வீடு. (218)
மதிபோ லுடம்பினை மாசற நோக்கில்
விதிபோ யகல விடும். (219)
சீவன் சிவலிங்க மாகத் தெளிந்தவர்தம்
பாவ நசிக்கும் பரிந்து. (220)
3.3 மெய்யகம்.
மெய்யகத்தி னுள்ளே விளங்குஞ்சுடர் நோக்கில்
கையகத்தி னெல்லிக் கனி. (221)
கரையற்ற செல்வத்தைக் காணுங் காலத்தில்
உரையற் றிருப்ப துணர்வு. (222)
உண்டுபசி தீர்ந்தாற் போலுடம் பெல்லா அங்
கண்டுகொள் காதல் மிகும். (223)
உரைசெயு மோசை யுரைசெய் பவர்க்கு
நரைதிரை யில்லை நமன். (224)
தோன்றாத தூயவெளி தோன்றியக்கா லுன்னைத்
தோன்றாமற் காப்ப தறிவு. (225)
வாக்குமனமு மிறந்த பொருள் காணில்
ஆக்கைக் கழிவில்லை யாம். (226)
கண்ணகத்தே நின்று களிதருமே காணுங்கால்
உன்னகத்தே நின்ற வொளி. (227)
ஆனந்த மான வருளை யறிந்தபின்
தானந்த மாகு மவர்க்கு. (228)
மறவாமற் காணும் வகையுணர் வாருக்
கிறவா திருக்கலு மாம். (229)
விண்ணிறைந்து நின்ற பொருளே யுடம்பதன்
உண்ணிறைந்து நின்ற வொளி. (230)
3.4 கண்ணாடி
கண்ணாடி தன்னி லொளிபோ லுடம்பதனுள்
உண்ணாடி நின்ற வொளி. (231)
அஞ்சு புலனின் வழியறிந்தாற் பின்னைத்
துஞ்சுவ தில்லை யுடம்பு. (232)
நாபி யகத்தே நலனுற நோக்கிடில்
சாவது மில்லை யுடம்பு. (233)
கண்டத் தளவிற் கடிய வொளிகாணில்
அண்டத்த ராகு முடம்பு. (234)
சந்திர னுள்ளே தழலுற நோக்கினால்
அந்தர மாகு முடம்பு. (235)
ஆர்க்குந் தெரியா வுருவந்தனை நோக்கில்
பார்க்கும் பரமா மவன். (236)
வண்ண மில்லாத வடிவை யறிந்தபின்
விண்ணவ ராகு முடம்பு. (237)
நெற்றிக்கு நேரே நிறைந்தவொளி காணில்
முற்று மழியா துடம்பு. (238)
மாதூ வெளியின் மனமொன்ற வைத்தபின்
போதக மாகு முடம்பு. (239)
சுத்தமோ டொன்றி மனமு மிறந்தக்கால்
முற்று மழியா துடம்பு. (240)
3.5 சூனியகாலமறிதல்.
நிரவி யழலுருவாய் நீண்ட வெளிகாணில்
அரவணையா னாகு முடம்பு. (241)
உருவந் தழலாக வுள்ளத்தே சென்று
புருவத் திடையிருந்து பார். (242)
புருவத் திடையிருந்து புண்ணியனைக் காணில்
உருவற்று நிற்கு முடம்பு. (243)
அகம்புறம் பேராப் பொருளை யறியில்
உகம்பல காட்டு முடம்பு. (244)
ஆவிபாழ் போகா தடக்கி யிருந்தபின்
ஓவிய மாகு முடம்பு. (245)
அஞ்சு மடக்கி யறிவோ டிருந்தபின்
துஞ்சுவ தில்லை யுடம்பு. (246)
தீயாக வுள்ளே தெளிவுற நோக்கினில்
மாயாது பின்னை யுடம்பு. (247)
தானந்த மின்றித் தழலுற நோக்கிடில்
ஆனந்த மாகு முடம்பு. (248)
ஒழிவின்றி நின்ற பொருளை யுணரில்
அழிவின்றி நிற்கு முடம்பு. (249)
பற்றற்று நின்ற பழம்பொருளைச் சிந்திக்கில்
முற்று மழியா துடம்பு. (250)
3.6 சிவயோகநிலை
அடிமிசை வாயு வடுத்தடுத் தேகி
முடிமிசை யோடி முயல். (251)
உண்ணாடி வாயு வதனை யுடனிரப்பி
விண்ணோடு மெள்ள விடு. (252)
மெள்ள விரேசித்து மெய்விம்மிப் பூரித்துக்
கொள்ளுமின் கும்பங் குறித்து. (253)
இரேசக முப்பத் திரண்டது மாத்திரை
பூரகம்பத் தாறு புகும். (254)
கும்பக நாலோ டறுபது மாத்திரை
தம்பித் திடுவது தான். (255)
முன்ன மிரேசி முயலுபின் பூரகம்
பின்னது கும்பம் பிடி. (256)
ஈரைந் தெழுபத் தீராயிர நாடியுஞ்
சேருமின் வாயுச் செயல். (257)
வாச லீரைந்து மயங்கிய வாயுவை
யீசன்றன் வாசலி லேற்று. (258)
தயாவினில் வாயு வலத்தி லியங்கில்
தியான சமாதிகள் செய். (259)
ஆதியா மூல மறிந்தஞ் செழுத்தினைப்
பேதியா தோது பினை. (260)
3.7 ஞானநிலை.
தற்புருட மாமுகந் தன்னிற் றனியிருந்
துற்பன மஞ்சை யுரை. (261)
தற்புருட மாமுகமேற் றாரகைதன் மேலே
நிற்பது பேரொளி நில். (262)
ஓதிய தற்புரு டத்தடி யொவ்வவே
பேதியா தோது பினை. (263)
கொழுந்துறு வன்னி கொழுவுற வொவ்வில்
எழுந்தா ரகையா மிது. (264)
மறித்துக் கொளுவிடு வன்னி நடுவே
குறித்துக் கொளுஞ்சீயைக் கூட்டு. (265)
காலுந் தலையு மறிந்து கலந்திடில்
சாலவும் நல்லது தான். (266)
பொன்னொடு வெள்ளி யிரண்டும் பொருந்திடில்
அன்னவன் றாளதுவே யாம். (267)
நின்ற வெழுத்துட னில்லா வெழுத்தினை
யொன்றுவிக்கி லொன்றே யுள. (268)
பேசா வெழுத்துடன் பேசு மெழுத்துறில்
ஆசான் பரனந்தி யாம். (269)
அழியா வுயிரை யவனுடன் வைக்கில்
பழியான தொன்றில்லை பார். (270)
3.8 ஞானம்பிரியாமை
பிறந்திட மாலிடம் பேரா திருப்பின்
இறந்திடம் வன்னி யிடம். (271)
சாகா திருந்த தலமே மவுனமது
ஏகாந்த மாக விரு. (272)
வெளியில் விளைந்த விளவின் கனிதான்
ஒளியி லொளியா யுறும். (273)
மறவா நினையா மவுனத் திருக்கில்
பிறவா ரிறவார் பினை. (274)
குருவாம் பரனந்தி கூடல் குறித்தாங்
கிருபோது நீங்கா திரு. (275)
சுந்தரச் சோதி துலங்கு மிடமது
மந்திரச் சக்கரமு மாம். (276)
தூராதி தூரஞ் சொல்லத் தொலையாது
பாராப் பராபரம் பார். (277)
ஈரொளி யீதென் றிறைவ னுரைத்தனன்
நீரொளி மீது நிலை. (278)
அந்தமு மாதியு மில்லா வரும்பொருள்
சுந்தர ஞானச் சுடர். (279)
இதுமுத்தி சாதனமென் றேட்டில் வரைந்து
பதிவைத்தனன் குரு பார். (280)
3.9 மெய்ந்நெறி
செல்லல் நிகழல் வருகால மூன்றினையுஞ்
சொல்லு மவுனத் தொழில். (281)
பஞ்சிற் படுபொறி போலப் பரந்திருந்து
துஞ்சாது ஞானச் சுடர். (282)
இமைப்பிற் பரந்தங் கொடுங்கு மின்போல
நமக்குட் சிவன்செயல் நாடு. (283)
குவித்து மனத்தைக் குவித்துள்ளே யோங்கில்
செவித்துப் பெறுவ தெவன். (284)
காலுந் தலையு மொன்றாகக் கலந்திடம்
நாலா நிலையென நாடு. (285)
மூல நிலமிசை மூன்றா நிலத்தினில்
ஆல மருந்துஞ் சிவம். (286)
எழுஞ்சுட ருச்சியின் மேல்மனம் வைக்கத்
தொழிலொன் றிலாத சுடர். (287)
அடைத்திட்ட வாசலின் மேல்மனம் வைத்துப்
படைத்தவன் தன்னையே பார். (288)
அறுபதொ டாறு வருட மிதனை
உறுதிய தாக வுணர். (289)
அட்டமா சித்தி யடையுமோ ராண்டினில்
இட்ட மிதனைத் தெளி. (290)
3.10 துரியதரிசனம்
வன்னிய தெட்டு மதியம் பதினாறு
முன்னிய பன்னிரண்டு முள். (291)
சூரியன் வன்னியொன் றாகிடிற் சோமனாம்
பாரு மினிது பயன். (292)
மதியொடு வன்னியொன் றாகவே வந்தால்
கதிரவ னாமென்று காண். (293)
மதிக்குட் கதிரவன் வந்தங் கொடுங்கில்
உதிக்குமாம் பூரணைச் சொல். (294)
தோற்றுங் கதிரவ னுண்மதி புக்கிடில்
சாற்று மமாவாசை தான். (295)
வன்னி கதிரவன் கூடிடி லத்தகை
பின்னிவை யாகு மெலாம். (296)
அமாவாசை பூரணை யாகு மவர்க்குச்
சமனா முயிருடம்பு தான். (297)
அண்டத்திலு மிந்த வாறென் றறிந்திடு
பிண்டத்திலு மதுவே பேசு. (298)
ஏறு மதிய மிறங்கி லுறங்கிடும்
கூறுமப் பூரணை கொள். (299)
உதிக்கு மதியமுங் கண்டங் குறங்கில்
மதிக்கு மமாவாசை யாம். (300)
3.11 உயர்ஞானதரிசனம்
கொண்டிடு மண்டல மூன்றங்கி தன்னையிப்
பிண்டமு மூழி பிரியா. (301)
வெள்ளி புதனொடு திங்க ளிடமெனத்
தள்ளுமின் கால சரம். (302)
செவ்வாய் சனிநா யிறுவல மாகவே
கொள்ளிலிவ் வாறிடரு மில். (303)
வளர்பொன் னிடம்பிறைத் தேய்வு வலமாம்
வளர்பிறை யென்றே மதி. (304)
வலத்திற் சனிக்கே யிராப்பகல் வாயு
செலுத்து பேராது செயல். (305)
இயங்கும் பகல்வல மிராவிடம் வாயு
தயங்குறல் நாடிக்குட் டான். (306)
அர சறியாம லவன்பே ருரைத்துத்
தரைதனை யாண்ட சமன். (307)
கல்லாத மூடர் திருவுருக் கொண்டிடச்
செல்லாத தென்ன செயல். (308)
திருவருட் பாலைத் தெரிந்து தெளியில்
குருவிருப்பா மென்று கொள். (309)
கற்கிலுங் கேட்கிலும் ஞானக் கருத்துற
நிற்கிற் பரமவை வீடு. (310)

முத்திக்கௌவையார்சொல் முந்நூற்றுப்பத்துமுன்
சித்தத்தில் வைத்துத் தெளி.
ஔவைகுறள் முற்றுப்பெற்றது.