திருப்புகழ்

பாடல் 1 -- விநாயகர் துதி
ராகம் - நாட்டை; தாளம் - ஆதி
தத்தன தனதன தத்தன தனதன
தத்தன தனதன ...... தனதான

கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுகன் ...... அடிபேணிக்

கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
கற்பகம் எனவினை ...... கடிதேகும்

மத்தமு மதியமும் வைத்திடும் அரன்மகன்
மற்பொரு திரள்புய ...... மதயானை

மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே

முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய ...... முதல்வோனே

முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம்
அச்சது பொடிசெய்த ...... அதிதீரா

அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை ...... இபமாகி

அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கண மணமருள் ...... பெருமாளே.

பாடல் 2 விநாயகர் துதி
ராகம் - நாட்டை / மோகனம்; தாளம் - ஆதி
தத்ததன தத்ததன தத்ததன தத்ததன
தத்ததன தத்ததன ...... தனதான

பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை
பட்சியெனு முக்ரதுர ...... கமுநீபப்

பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
பட்டுருவ விட்டருள்கை ...... வடிவேலும்

திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு
சிற்றடியு முற்றியப ...... னிருதோளும்

செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு
செப்பெனஎ னக்கருள்கை ...... மறவேனே

இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய்
எட்பொரிய வற்றுவரை ...... இளநீர்வண்

டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள
ரிப்பழமி டிப்பல்வகை ...... தன஧முலம்

மிக்கஅடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு
விக்கிநச மர்த்தனெனும் ...... அருளாழி

வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்
வித்தகம ருப்புடைய ...... பெருமாளே.

பாடல் 3 விநாயகர்
ராகம் - ஹம்ஸத்வனி / ஆனந்தபைரவி; தாளம் - அங்கதாளம் (8)
தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தகதிமிதக-3

தந்ததனத் தானதனத் ...... தனதான

உம்பர்தருத் தேநுமணிக் ...... கசிவாகி
ஒண்கடலிற் றேனமுதத் ...... துணர்வூறி

இன்பரசத் தேபருகிப் ...... பலகாலும்
என்றனுயிர்க் காதரவுற் ...... றருள்வாயே

தம்பிதனக் காகவனத் ...... தணைவோனே
தந்தைவலத் தாலருள்கைக் ...... கனியோனே

அன்பர்தமக் கானநிலைப் ...... பொருளோனே
ஐந்துகரத் தானைமுகப் ...... பெருமாளே.

பாடல் 4 விநாயகர்
ராகம் - ஹம்ஸத்வனி; தாளம் - அங்கதாளம் (7 1/2)
தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2, தகஜனு-2

தனன தனதன தத்தன தத்தன
தனன தனதன த்ததன தத்தன
தனன தனதன த்ததன தத்தன ...... தனதான

நினது திருவடி சத்திம யிற்கொடி
நினைவு கருதிடு புத்திகொ டுத்திட
நிறைய அமுதுசெய் முப்பழ மப்பமு ...... நிகழ்பால்தேன்

நெடிய வளைமுறி இக்கொடு லட்டுகம்
நிறவில் அரிசிப ருப்பவல் எட்பொரி
நிகரில் இனிகத லிக்கனி வர்க்கமும் ...... இளநீரும்

மனது மகிழ்வொடு தொட்டக ரத்தொரு
மகர சலநிதி வைத்தது திக்கர
வளரு கரிமுக ஒற்றைம ருப்பனை ...... வலமாக

மருவு மலர்புனை தொத்திர சொற்கொடு
வளர்கை குழைபிடி தொப்பண குட்டொடு
வனச பரிபுர பொற்பத அர்ச்சனை ...... மறவேனே

தெனன தெனதென தெத்தென னப்பல
சிறிய அறுபத மொய்த்துதி ரப்புனல்
திரளும் உறுசதை பித்தநி ணக்குடல் ...... செற஧முளை

செரும உதரநி ரப்புசெ ருக்குடல்
நிரைய அரவநி றைத்தக ளத்திடை
திமித திமிதிமி மத்தளி டக்கைகள் ...... செகசேசே

எனவெ துகுதுகு துத்ததென ஒத்துகள்
துடிகள் இடிமிக ஒத்துமு ழக்கிட
டிமுட டிமுடிமு டிட்டிமெ னத்தவில் ...... எழுமோசை

இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட
இரண பயிரவி சுற்றுந டித்திட
எதிரு நிசிசர ரைப்பெலி யிட்டருள் ...... பெருமாளே.

பாடல் 5 விநாயகர்
ராகம் - கெளளை; தாளம் - திஸ்ரத்ருபுடை (7) / மிஸ்ரசாபு (3 1/2)
தனதனன தான தனதனன தான
தனதனன தான ...... தனதான

விடமடைசு வேலை அமரர்படை சூலம்
விசையன்விடு பாண ...... மெனவேதான்

விழியுமதி பார விதமுமுடை மாதர்
வினையின் விளை வேதும் ...... அறியாதே

கடியுலவு பாயல் பகலிரவெ னாது
கலவிதனில் மூழ்கி ...... வறிதாய

கயவனறி வீனன் இவனுமுயர் நீடு
கழலிணைகள் சேர ...... அருள்வாயே

இடையர்சிறு பாலை திருடிகொடு போக
இறைவன்மகள் வாய்மை ...... அறியாதே

இதயமிக வாடி யுடையபிளை நாத
கணபதியெ னாம ...... முறைகூற

அடையலவர் ஆவி வெருவஅடி கூர
அசலுமறி யாமல் ...... அவரோட

அகல்வதென டாசொல் எனவுமுடி சாட
அறிவருளும் ஆனை ...... முகவோனே.

பாடல் 6 (நூல்)
ராகம் - கெளளை; தாளம் - திஸ்ரத்ருபுடை (7) / மிஸ்ரசாபு (3 1/2)
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன ...... தனதான

முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்

முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப்

பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்

பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே

தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத்

திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக்

கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை

கோட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே.

பாடல் 7 (திருப்பரங்குன்றம்)
ராகம் - .....; தாளம் - .........
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன ...... தனதான

அருக்கு மங்கையர் மலரடி வருடியெ
கருத்த றிந்துபின் அரைதனில் உடைதனை
அவிழ்த்தும் அங்குள அரசிலை தடவியும் ...... இருதோளுற்

றணைத்தும் அங்கையின் அடிதொறும் நகமெழ
உதட்டை மென்றுபல் இடுகுறி களுமிட
அடிக்க ளந்தனில் மயில்குயில் புறவென ...... மிகவாய்விட்

டுருக்கும் அங்கியின் மெழுகென உருகிய
சிரத்தை மிஞ்சிடும் அநுபவம் உறுபலம்
உறக்கை யின்கனி நிகரென இலகிய ...... முலைமேல்வீழ்ந்

துருக்க லங்கிமெய் உருகிட அமுதுகு
பெருத்த உந்தியின் முழுகிமெ யுணர்வற
உழைத்தி டுங்கன கலவியை மகிழ்வது ...... தவிர்வேனோ

இருக்கு மந்திரம் எழுவகை முநிபெற
உரைத்த சம்ப்ரம சரவண பவகுக
இதத்த இங்கிதம் இலகிய அறுமுக ...... எழில்வேளென்

றிலக்க ணங்களும் இயலிசை களுமிக
விரிக்கும் அம்பல மதுரித கவிதனை
இயற்று செந்தமிழ் விதமொடு புயமிசை ...... புனைவோனே

செருக்கும் அம்பல மிசைதனில் அசைவுற
நடித்த சங்கரர் வழிவழி அடியவர்
திருக்கு ருந்தடி அருள்பெற அருளிய ...... குருநாதர்

திருக்கு ழந்தையு மெனஅவர் வழிபடு
குருக்க ளின்திற மெனவரு பெரியவ
திருப்ப ரங்கிரி தனிலுறை சரவண ...... பெருமாளே.

பாடல் 8 (திருப்பரங்குன்றம்)
ராகம் - ஸாவேரி; தாளம் - ஆதி
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன ...... தனதான

உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை
உரைத்தி லன்பல மலர்கொடுன் அடியிணை
உறைப்ப ணிந்திலன் ஒருதவ மிலனுன ...... தருள்மாறா

உளத்து ளன்பினர் உறைவிடம் அறிகிலன்
விருப்பொ டுன்சிக ரமும்வலம் வருகிலன்
உவப்பொ டுன்புகழ் துதிசெய விழைகிலன் ...... மலைபோலே

கனைத்தெ ழும்பக டதுபிடர் மிசைவரு
கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர்
கதித்த டர்ந்தெறி கயிறடு கதைகொடு ...... பொருபோதே

கலக்கு றுஞ்செயல் ஒழிவற அழிவுறு
கருத்து நைந்தல முறுபொழு தளவைகொள்
கணத்தில் என்பய மறமயில் முதுகினில் ...... வருவாயே

வினைத்த லந்தனில் அலகைகள் குதிகொள
விழுக்கு டைந்துமெய் உகுதசை கழுகுண
விரித்த குஞ்சியர் எனுமவு ணரைஅமர் ...... புரிவேலா

மிகுத்த பண்பயில் குயில்மொழி அழகிய
கொடிச்சி குங்கும முலைமுக டுழுநறை
விரைத்த சந்தன ம்ருகமத புயவரை ...... உடையோனே

தினத்தி னஞ்சதுர் மறைமுநி முறைகொடு
புனற்சொ ரிந்தலர் பொதியவி ணவரொடு
சினத்தை நிந்தனை செயுமுநி வரர்தொழ ...... மகிழ்வோனே

தெனத்தெ னந்தன எனவரி யளிநறை
தெவிட்ட அன்பொடு பருகுயர் பொழில்திகழ்
திருப் பரங்கிரி தனிலுறை சரவண ...... பெருமாளே.

பாடல் 9 (திருப்பரங்குன்றம்)
ராகம் - ஹிந்தோளம் / வராளி; தாளம் - அங்கதாளம் (7) (திஸ்ரத்ருபுடை)
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2, தகிட-1 1/2

தனனதந்த தத்தத்த தந்த
தனனதந்த தத்தத்த தந்த
தனனதந்த தத்தத்த தந்த ...... தனதான

கருவடைந்து பத்துற்ற திங்கள்
வயிறிருந்து முற்றிப்ப யின்று
கடையில்வந்து தித்துக்கு ழந்தை ...... வடிவாகிக்

கழுவியங்கெ டுத்துச்சு ரந்த
முலையருந்து விக்கக்கி டந்து
கரறியங்கை கொட்டித்த வழ்ந்து ...... நடமாடி

அரைவடங்கள் கட்டிச்ச தங்கை
இடுகுதம்பை பொற்சுட்டி தண்டை
அவையணிந்து முற்றிக்கி ளர்ந்து ...... வயதேறி

அரியபெண்கள் நட்பைப்பு ணர்ந்து
பிணியுழன்று சுற்றித்தி ரிந்த
தமையுமுன்க்ரு பைச்சித்தம் என்று ...... பெறுவேனோ

இரவிஇந்த்ரன் வெற்றிக்கு ரங்கி
னரசரென்றும் ஒப்பற்ற உந்தி
யிறைவன்எண்கி னக்கர்த்த னென்றும் ...... நெடுநீலன்

எரியதென்றும் ருத்ரற்சி றந்த
அநுமனென்றும் ஒப்பற்ற அண்டர்
எவரும்இந்த வர்க்கத்தில் வந்து ...... புனமேவ

அரியதன்ப டைக்கர்த்த ரென்று
அசுரர்தங்கி ளைக்கட்டை வென்ற
அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின் ...... மருகோனே

அயனையும்பு டைத்துச்சி னந்து
உலகமும்ப டைத்துப்ப ரிந்து
அருள்பரங்கி ரிக்குட்சி றந்த ...... பெருமாளே.

பாடல் 10 (திருப்பரங்குன்றம்)
ராகம் - ....; தாளம் - .......

தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன ...... தனதான

கறுக்கும் அஞ்சன விழியிணை அயில்கொடு
நெருக்கி நெஞ்சற எறிதரு பொழுதொரு
கனிக்குள் இன்சுவை அழுதுகும் ஒருசிறு ...... நகையாலே

களக்கொ ழுங்கலி வலைகொடு விசிறியெ
மனைக்கெ ழுந்திரும் எனமனம் உருகஒர்
கவற்சி கொண்டிட மனைதனில் அழகொடு ...... கொடுபோகி

நறைத்த பஞ்சணை மிசையினில் மனமுற
அணைத்த கந்தனில் இணைமுலை எதிர்பொர
நகத்த ழுந்திட அமுதிதழ் பருகிய ...... மிடறு஡டே

நடித்தெ ழுங்குரல் குமுகுமு குமுவென
இசைத்து நன்கொடு மனமது மறுகிட
நழுப்பு நஞ்சன சிறுமிகள் துயரற ...... அருள்வாயே

நிறைத்த தெண்டிரை மொகுமொகு மொகுவென
உரத்த கஞ்சுகி முடிநெறு நெறுவென
நிறைத்த அண்டமு கடுகிடு கிடுவென ...... வரைபோலும்

நிவத்த திண்திகழ் நிசிசர ருரமொடு
சிரக்கொ டுங்குவை மலைபுரை தரஇரு
நிணக்கு ழம்பொடு குருதிகள் சொரிதர ...... அடுதீரா

திறற்க ருங்குழல் உமையவள் அருளுறு
புழைக்கை தண்கட கயமுக மிகவுள
சிவக்கொ ழுந்தன கணபதி யுடன்வரும் ...... இளையோனே

சினத்தொ டுஞ்சமன் உதைபட நிறுவிய
பரற்கு ளன்புறு புதல்வநன் மணியுகு
திருப்ப ரங்கிரி தனிலுறை சரவண ...... பெருமாளே.