விநாயகர் அகவல்

விநாயகர் அகவல்

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்

வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன!

இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து

குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து

தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும்

பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்

குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்

குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப்

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து

முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில்

எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே!

சிவபுராணம்

சிவபுராணம்
(திருப்பெருந்துறையில் அருளியது
தற்சிறப்புப் பாயிரம்)

நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க

வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி

சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான்.

கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன்

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே

வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே

ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே

கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை

மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய,

விலங்கு மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்

தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்

பேராது நின்ற பெருங்கருணைப் போராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே

அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில்

நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய்

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று

போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே

அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து.

திருச்சிற்றம்பலம்

பரிகார கோவில்கள்

பரிகார ஸ்தலங்கள்

மனிதனாகப் பிறந்து விட்டாலே இந்த உலகில் ஏற்படும் இன்ப துன்பங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்பது அவன் கட்டளை.

இருப்பினும் நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்களைப் போக்க பல்வேறு பரிகார சிவன் கோயில்கள் உள்ளன. அவை எந்தெந்த மாவட்டங்களில் அமைந்துள்ளன. அந்தக் கோயில்களுக்கு சென்று வழிபட்டால் நாம் எவ்வாறு துன்பங்களில் இருந்து விடுபடலாம் என்பதைப் பார்ப்போம்.

நீண்ட காலமாக திருமணம் நடக்காமல் இருப்போர், திருமணம் தட்டிப்போவோருக்கு - திருமணஞ்சேரி, திருவீழிமிழலை. இந்த இரு தலங்களுமே திருவாரூர் மாவட்டத்தில் அமைந்திருப்பது சிறப்பு.

குழந்தைப்பேறு வேண்டுவோர் - திருவெண்காடு சென்று வழிபடலாம். இந்த தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

நாகதோஷம் உள்ளவர்கள் - திருநாகேஸ்வரம் (தஞ்சாவூர் மாவட்டம்), சங்கரன்கோயில் (திருநெல்வேலி மாவட்டம்).

மூட்டு வலி போன்ற தீராத நோய்கள் நீங்க - வைத்தீஸ்வரன் கோயில் (நாகை மாவட்டம்), சூரியனார் கோயிலை ஒட்டியுள்ள திருமங்கலக்குடி (தஞ்சாவூர்).

மனநோய் தீர திருமுருகன் பூண்டி சென்று வழிபட வேண்டும். இக்கோயில் கோவை மாவட்டத்தில் உள்ளது.

குருவருள் பெற (குருஸ்தலம்) - ஆலங்குடி (திருவாரூர்), திருச்செந்தூர் (தூத்துக்குடி மாவட்டம்).

தீமைகள் யாவும் தொலைய பவானி சங்கமேஸ்வரர் ஆலயம் சென்று வழிபட வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் இக்கோயில் உள்ளது.

பிறவியற்ற நிலையை அடைய திருவாரூர், திருவண்ணாமலை, சிதம்பரம் (கடலூர்) சிவன் கோயில்களை வழிபடல் வேண்டும்.

கடன் தொல்லை தீர்ந்து நிம்மதி பெற திருச்சேறை ரண ருண ஈஸ்வரரை (தஞ்சாவூர்) வழிபட வேண்டும்.

கர்ப்பிணிப் பெண்கள் சுகப்பிரசவம் ஆவதற்கு திருக்கருகாவூர் கர்ப்பரட்சகாம்பிகை (தஞ்சை) மற்றும் குங்குமவல்லி சமேத தான்தோன்றீஸ்வரரை (திருச்சி) வணங்குதல் வேண்டும்.

பித்ரு தோஷம் எனப்படும் முன்னோர்களை வழிபடத் தவறியவர்களுக்கு ஏற்படும் தீவினைகளுக்கு ராமேஸ்வரத்தில் (ராமநாதபுரம்) உள்ள ராமநாத சுவாமியை வழிபடலாம்.

செவ்வாய் தோஷம் நீங்க வைத்தீஸ்வரன் கோயில் (நாகப்பட்டினம்).

விஷக்கடி நிவாரணத்திற்கு சங்கரன் கோயில் (திருநெல்வேலி) சங்கரநயினாரை வழிபட வேண்டும். சிவகங்கையில் உள்ள நயினார் கோயில் சென்றும் வழிபடலாம்.

வழக்குகளில் வெற்றியடைய அய்யாவாடி பிரத்யங்கிரா, திருப்புவனம் (தஞ்சாவூர்) கடவுள் வழிபாடு.

சனி தோஷம் நீங்கி சுபிட்சம் பெற திருநள்ளாறு (காரைக்கால்), திருக்கொள்ளிக்காடு (தஞ்சாவூர்) சென்று வணங்கலாம்.

ராகு கேது பரிகாரத்தை இணைந்து மேற்கொள்ள திருப்பாம்புரம் (திருவாரூர்) கோயில்

குரு சந்திர

குருசந்திர யோகம்

குருவும் சந்திரனும் ஒன்றாக இருந்தால் அது குருசந்திர யோகம் என்று கூறப்படும். குருவும் சந்திரனும் எந்த வீட்டில் (மேஷம் முதல் மீனம் வரை) இருந்தாலும் அது குருசந்திர யோகமாகவே கருதப்படும்.

இந்த யோகம் உடையவர்கள் மிகவும் சிரத்தையுடன், தீர்க்கமான சிந்தனை, எதிலும் நேர்வழியை கடைபிடிப்பது, நீண்ட ஆயுள், சத்தியம் தவறாமை, மனசாட்சிக்கு கட்டுப்படுவது போன்ற குணங்கள் உடையவர்களாக இருப்பர். மற்றவர்களைக் காட்டிலும் இவர்கள் தாய்ப்பாசம் அதிகம் உடையவர்கள்.

சந்திரன் ஆட்சி பெறுவதாலும், குரு உச்சம் பெறுவதாலும் கடகத்தில் குருசந்திர யோகம் அமையப் பெற்றவர்கள் மிகப் பெரிய ராஜயோகம் உடையவர்களாகவும், நான்கு வேதங்களையும், 64 கலைகளையும் கற்றறிந்தவர்களாகவும், மற்றவர்களுக்கு போதிக்கக் கூடியவர்களாகவும் இருப்பார்கள் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

அதே குருசந்திர யோகம் மீனத்தில் இருந்தால் சிறப்பான பலன்கள் கிட்டும். ரிஷபத்தில் குருசந்திர யோகம் இருந்தால் நாடாளும் யோகம் கிடைக்கும்.

பொதுவாக குருசந்திர யோகம் பெற்றவர்கள் பலர் மதிக்கக் கூடிய பதவியில் அமர்வார்கள். எந்தத் துறையில் இருந்தாலும் அத்துறையில் சிறந்து விளங்குவர்.


சந்திரன் மனோகாரகன். அவர்தான் உடலுக்கு உரியவர். இதன் காரணமாக சந்திரனுடன் குரு சேரும் யோகம் பெற்றவர்களின் மனது, உடலும் சுத்தமானதாக இருக்கும். எனவே மனதாலும், உடலாலும் (தனது செய்கையால்) யாருக்கும் அவர்கள் தீங்கு செய்ய மாட்டார்கள். இவர்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கையும், தேக பலமும் கிடைக்கும்.

மனைவி, குழந்தைகள் மீது அதிக பிரியம் உள்ளவர்களாகத் திகழ்வர். மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பு கொடுப்பர்.

ஆனால் குருசந்திர யோகத்தால் சில பிரச்சனைகளும் ஏற்படும். உதாரணமாக ஒரு சில விடயங்களில் மற்றவர்களுடன் ஒத்துப்போக மாட்டார்கள். தாங்கள் பிடித்த முயலுக்கு 3 கால்கள் என்பது போல் இருப்பர்.

விருச்சிகத்தில் குருசந்திர யோகம் காணப்பட்டால் தன்னைப் பற்றி எப்போதுமே ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்து கொண்டே இருக்கும். நிறைய முயற்சிகள் செய்தாலும் அதற்கு உண்டான பலன் கிடைக்கவில்லையே என்ற எண்ணம் தோன்றும். தன்னை யாரும் புரிந்து கொள்ளவில்லையே என்றும் புலம்புவர்.

சரியாகக் கூறவேண்டுமென்றால் மேம்பட்ட நிலைக்கும், தாழ்வு மனைப்பான்மைக்கும் இடையே சிக்கித் தவிப்பர்.

இதுமட்டுமின்றி, குருவும், சந்திரனும் எந்தப் பாகையில் இணைகின்றது. எவ்வளவு பாகை (டிகிரி) வித்தியாசப்படுகிறது என்பதைப் பொறுத்தும் யோகப் பலன்கள் மாறுபடும். எனவே, குரு-சந்திரன் சேர்ந்துவிட்டாலே அது ராஜயோகம் என்று கூறிவிட முடியாது

வர்கோத்தம யோகம்

வர்கோத்தம யோகம்
ஒருவர் ஜாதகத்தில் குறிப்பிட்ட ஒரு கிரகம் அவர்களது ராசியிலும், நவாம்சத்திலும் ஒரே வீட்டில் இருந்தால் அதனை வர்கோத்தமம் அல்லது வர்கோத்தம யோகம் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

உதாரணமாக ஒருவரது ஜனன (ராசி) ஜாதகத்தில், குரு கடகத்தில் அமர்ந்துள்ளார் என்றால், அவரது நவாம்சத்திலும் குரு கடகத்தில் அமர்ந்திருந்தால் வர்கோத்தமம் என்று கொள்ளலாம்.

ஒருவரது ஜாதகத்தில் ஆட்சி/உச்சம் பெற்ற கிரகங்களை விட வர்கோத்தமம் பெற்ற கிரகம் பல ராஜ யோகங்களைத் தர வல்லது. ஒருவருக்கு 2 அல்லது 3 கிரகங்கள் வர்கோத்தமம் பெற்றிருந்தால் அவருக்கு அதிக அளவிலான ராஜயோகம் கிடைக்கும்.

அதேவேளையில் எந்த கிரகம் வர்கோத்தமம் பெற்றுள்ளது என்பதையும் பார்க்க வேண்டும். பாக்கியாதிபதி, ஜீவனாதிபதி, சுகாதிபதி ஆகிய கிரகங்கங்கள் வர்கோத்தமம் அடைந்தால் ஆயுள் முழுவதும் சிறப்பான பலன்களை அந்த ஜாதகர் அனுபவிப்பார்.

ஒரு சில பாவ கிரகங்கள் வர்கோத்தமம் பெற்றாலும் அவை சுபத்தன்மை அடைந்து, சிறப்பான பலன்களைத் தரும் என்பதால் கவலை கொள்ளத் தேவையில்லை.

கேமதுருமா யோகம்

கேமதுருமா யோகம்

இது ஒரு அவயோகம்!

ஜாதகத்தில் சந்திரனுக்கு முன்னும் பின்னும் உள்ள வீடுகளில் வேறு
எந்தக் கிரகமும் இல்லாமல் இருந்து, சந்திரனும் வேறு எவருடைய
கூட்டணியும் இல்லாமல் தனித்து இருந்து, சந்திரனுக்கு 7ஆம் வீட்டில்
எந்த கிரகமும் இல்லாமலிருந்தால் அதற்குப் பெயர் கேமதுருமாயோகம்

சந்திரன் மனதிற்கான கிரகம். இந்த அமைப்புள்ள ஜாதகனுக்கு மனப் பிரச்சினைகள் ஒன்று மாற்றி ஒன்று இருந்து கொண்டே இருக்கும்

இந்த அமைப்புள்ள ஜாதகனை அடிக்கடி துன்பம் சூழும், ஜாதகனிடம்
பெருந்தன்மை இருக்காது. ஜாதகன் வறுமையில் கஷ்டப்பட நேரிடும்.

இந்த அமைப்புள்ள ஜாதகன் அல்லது ஜாதகி, வயதான காலத்தில்
தனித்திருக்க நேரிடும். வயதான காலத்தில் சிலரை நிரந்தமாகப் புலம்பும்
நிலைக்குக் கொண்டுவந்து விட்டுவிடும்! அவர்கள் தனிமையில் வாட
நேரிடும்

சில விதிவிலக்குகள்:

இந்த அமைப்பில், சந்திரனுக்கு ஏழாம் வீட்டில், ராகு கேதுவைத் தவிர்த்து
மற்ற ஆறு கிரகங்களில் ஏதாவது ஒன்று 7ஆம் வீட்டில் இருந்தால் இந்த
யோகம் காணாமற்போய்விடும். அதோடு அது நன்மையாகவும் மாறிவிடும்

குரு லக்கினத்தில் அல்லது கேந்திர வீடுகளில் இருந்தால், இந்த
அவயோகம் ஜாதகனை அனுகாமல் காத்து நிற்கும்!

ஆனால் கேமதுருமா அமைப்பே ஒரு கேந்திர வீட்டில் இருந்தால்
ஜாதகனின் நிலைமை மோசமாக இருக்கும்

இந்த அவயோகம் உள்ளவர்கள் அதிலிருந்து விடுபட திரிபுர மந்திரத்தை
அனுதினமும் 108 முறைகள் சொல்வது நல்லது. மந்திரங்களில் நம்பிக்கை
உள்ளவர்கள் சொல்லலாம்.

புதாத்திய யோகம்

புதாத்திய யோகம்

ஒருவருடைய ஜாதகத்தில் புதனும் சூரியனும் சேர்ந்து இருப்பது புதாத்திய யோகம் எனப்படும். இந்த கிரக சேர்க்கை உள்ளவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவர். பொதுவாக இந்த புதாத்திய யோகம் மற்ற பாப கிரகங்கள் பார்க்காவிட்டால் இந்த யோகமானது விரிவாக செயல்படும். புதன் கிரகமானது நவ கிரகங்களில் மிக வலிமை குன்றியது ஆகும். அதனால்தான் புதன் சுபரோடு சேர்ந்தால் சுபராகவும் பாபரோடு சேர்ந்தால் பாபராகவும் செயல்படும். எனவேதான் மற்ற பாப கிரகங்கள் பார்க்காமல் இருந்தால் இந்த யோகம் முழுமையாக செயல்படும். புதன் மற்ற கிரகங்களின் பார்வையில் படும்போது அவர்களுடைய பலன்களை செய்யுமே தவிர தனது பலன்களை செய்ய முடியாமல் போய்விடும்.

புதன் மற்றெந்த கிரகங்களின் பார்வையை பெறாமல் இருந்தால் நல்ல பலன்களை செய்யும். பொதுவாக புதன் விதியா காரகன் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். இந்த வித்யா காரகன் சூரியனுடன் சேரும்போது அதிபலம் பெற்று சிறந்த கல்வியையும், கல்வியால் சிறந்த முன்னேற்றத்தையும் கொடுத்துவிடும் என்றால் அது மிகையல்ல. பட்ட படிப்பு படிப்பதற்கும் பல்கலைகழகங்கள் செல்வதற்கும் இந்த புதாத்திய யோகம் மிக அவசியமான ஒன்று. இவர்கள் கல்விக்காக எவ்வளவு தூரமாகினும் சென்று கல்வி பெறுவர். சிறந்த நாவன்மையும் இவர்களிடம் ஒருங்கே அமையபெற்று இருக்கும். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவது இதனால்தான். எதையும் ஆராய்ந்து அறிதுகொள்ளும் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள். கல்லூரி ஆசிரியர்களுக்கு இந்த அமைப்பானது நிச்சயமாக இருக்கும், இந்த புதாத்திய யோகத்தில் புதனாவது சுரியனாவது உச்சமாகவோ அல்லது ஆச்சியாகவோ இருந்தால் அவர்களே பல நாடுகளும் அறியும் சிறந்த அறிவாளிகளாக வருவர். அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த அமைப்பு உறுதியாக உண்டு.