ஔவையார்

குறள்மூலம் - ஔவையார்
நேரிசைவெண்பா.

நல்லோர் பிறர்குற்ற நாடார் நலந்தெரிந்து
கல்லார் பிறர்குற்றங் காண்பரோ-அல்லாத
என்போல்வா ரென்னை யிகழ்வரோ வென்கவிக்குப்
பின்பாரோ காண்பார் பிழை.

ஈதலறந் தீவினைவிட் டீட்டல்பொரு ளெஞ்ஞான்றுங்
காதலிரு வர்க்குங் கருத்தொருமித்-தாதரவு
பட்டதே யின்பம் பரனைநினைந் திம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு.

ஒளவைகுறள்
முதலாவது : வீட்டுநெறிப்பால்.

1.1 பிறப்பினிலைமை.
ஆதியாய் நின்ற வறிவு முதலெழுத்
தோதிய நூலின் பயன். (1)
பரமாய சத்தியுட் பஞ்சமா பூதந்
தரமாறிற் றோன்றும் பிறப்பு. (2)
ஓசைபரிச முருவஞ் சுவை நாற்றம்
ஆசை படுத்து மளறு. (3)
தருமம் பொருள்காமம் வீடெனு நான்கும்
உருவத்தா லாய பயன். (4)
நிலமைந்து நீர்நான்கு நீடங்கி மூன்றே
உலவையிரண் டொன்று விண். (5)
மாயன் பிரம னுருத்திரன் மகேசனோ
டாயுஞ் சிவமூர்த்தி யைந்து. (6)
மாலய னங்கி யிரவிமதி யுமையோ
டேலுந் திகழ்சத்தி யாறு. (7)
தொக்குதிரத் தோடூன் மூளைநிண மென்பு
சுக்கிலந் தாதுக ளேழு. (8)
மண்ணொடு நீரங்கி மதியொடு காற்றிரவி
விண்ணெச்ச மூர்த்தியோ டெட்டு. (9)
இவையெல்லாங் கூடி யுடம்பாய வொன்றி
னவையெல்லா மானது விந்து. (10)
1.2 உடம்பின்பயன்.
உடம்பினைப் பெற்ற பயனாவ தெல்லாம்
உடம்பினி லுத்தமனைக் காண். (11)
உணர்வாவ தெல்லா முடம்பின் பயனே
யுணர்க வுணர் வுடையார். (12)
ஒருபய னாவ துடம்பின் பயனே
தருபயனாஞ் சங்கரனைச் சார். (13)
பிறப்பினாற் பெற்ற பயனாவ தெல்லாந்
துறப்பதாந் தூநெறிக்கட் சென்று. (14)
உடம்பினா லன்றி யுணர்வுதா னில்லை
யுடம்பினா லுன்னியதே யாம். (15)
மாசற்ற கொள்கை மனத்தி லடைந்தக்கால்
ஈசனைக் காட்டு முடம்பு. (16)
ஓசை யுணர்வுக ளெல்லாந் தருவிக்கும்
நேசத்தா லாய வுடம்பு. (17)
உயிர்க்குறுதி யெல்லா முடம்பின் பயனே
அயிர்ப்பின்றி யாதியை நாடு. (18)
உடம்பினாற் பெற்ற பயனாவ தெல்லாம்
திடம்பட வீசனைத் தேடு. (19)
அன்னத்தா லாய வுடம்பின் பயனெல்லா
முன்னோனைக் காட்டி விடும். (20)
1.3 உள்ளுடம்பினிலைமை
கற்கலாங் கேட்கலாங் கண்ணாரக் காணலாம்
உற்றுடம்பா லாய வுணர்வு. (21)
வெள்ளிபொன் மேனிய தொக்கும் வினையுடைய
உள்ளுடம்பி னாய வொளி. (22)
சென்றுண்டு வந்து திரிதரு முள்ளுடம்
பென்றுங் கெடாத திது. (23)
வருபய னுண்டு மகிழ்ந்துடனா நிற்கும்
ஒருபயனைக் காட்டு முடம்பு. (24)
அல்லற் பிறப்பை யகற்றுவிக்கு மாய்ந்தாய
தொல்லை யுடம்பின் றொடர்பு. (25)
நல்வினையுந் தீவினையு முண்டு திரிதருஞ்
செய்வினைக்கும் வித்தா முடம்பு. (26)
உள்ளுடம்பின் வாழ்வன வொன்பது மேழைக்
கள்ளவுடம் பாகி விடும். (27)
பொய்க்கெல்லாம் பாசனமா யுள்ளதற்கோர் வித்தாகு
மெய்க்குள்ளா மாய வுடம்பு. (28)
வாயுவினா லாய வுடம்பின் பயனே
ஆயுவி னெல்லை யது. (29)
ஒன்பது வாசலு மொக்க வடைத்தால்
அன்பதி லொன்றா மரன். (30)
1.4 வீட்டுநெறிப்பால்.
நாடிதாரணை.
எழுபத்தீ ராயிர நாடியவற்றுள்
முழுபத்து நாடி முதல். (31)
நரம்பெனு நாடி யிவையினுக் கெல்லாம்
உரம்பெறு நாடியொன் றுண்டு. (32)
உந்தி முதலா யுறுமுடிகீழ் மேலாய்ப்
பந்தித்து நிற்கும் பரிந்து. (33)
காலொடு கையி னடுவிடைத் தாமரை
நூல்போலு நாடி நுழைந்து. (34)
ஆதித்தன் றன்கதிர் போலவந் நாடிகள்
பேதித்துத் தாம்பரந்த வாறு. (35)
மெய்யெல்லா மாகி நரம்போ டெலும்பிசைந்து
பொய்யில்லை நாடிப் புணர்வு. (36)
உந்தி முதலாகி யோங்காரத்துட் பொருளாய்
நின்றது நாடி நிலை. (37)
நாடிக ளூடுபோய்ப் புக்க நலஞ்சுடர்தான்
வீடு தருமாம் விரைந்து. (38)
நாடிவழக்க மறிந்து செறிந்தடங்கி
நீடொளி காண்ப தறிவு. (39)
அறிந்தடங்கி நிற்குமந் நாடிக டோறுஞ்
செறிந்தடங்கி நிற்குஞ் சிவம். (40)
1.5 வாயுதாரணை.
மூலத்தினிற் றோன்றி முடிவிலிரு நான்காகிக்
கால்வெளியிற் பன்னிரண்டாங் காண். (41)
இடை பிங்கலைக ளிரேசக மாற்றில்
அடையு மரனா ரருள். (42)
அங்குலியால் மூடி முறையா லிரேசிக்கில்
பொங்குமாம் பூரகத்தி னுள். (43)
எண்ணிலி யூழி யுடம்பா யிரேசிக்கில்
உண்ணிலைமை பெற்ற துணர்வு. (44)
மயிர்க்கால் வழியெல்லா மாய்கின்ற வாயு
உயர்ப்பின்றி யுள்ளே பதி. (45)
இரேசிப்பது போலப் பூரித்து நிற்கில்
தராசுமுனை நாக்கதுவே யாம் (46)
கும்பகத்தி னுள்ளே குறித்தரனைத் தானோக்கில்
தும்பிபோ னிற்குந் தொடர்ந்து. (47)
இரேசக பூரக கும்பக மாற்றில்
தராசுபோ னிற்குந் தலை. (48)
வாயுவழக்க மறிந்து செறிந் தடங்கில்
ஆயுட் பெருக்க முண்டாம். (49)
போகின்ற வாயு பொருந்திற் சிவமொக்கும்
தாழ்கின்ற வாயு வடக்கு. (50)
1.6 அங்கிதாரணை.
அந்தத்தி லங்கி யழல்போலத் தானோக்கில்
பந்தப் பிறப்பறுக்க லாம். (51)
உள்ளும் புறம்பு மொருங்கக் கொழுவூறில்
கள்ளமல மறுக்க லாம். (52)
எரியுந் தழல்போல வுள்ளுற நோக்கில்
கரியுங் கனலுருவ மாம். (53)
உள்ளங்கி தன்னை யொருங்கக் கொழுவூறில்
வெள்ளங்கி தானாம் விரைந்து. (54)
உந்தியி னுள்ளே யொருங்கச் சுடர்பாய்ச்சில்
அந்தி யழலுருவ மாம். (55)
ஐயைந்து மாய வகத்து ளெரிநோக்கில்
பொய்யைந்தும் போகும் புறம். (56)
ஐம்பது மொன்று மழல்போலத் தானோக்கில்
உம்பரொளி யாய் விடும். (57)
தூண்டுஞ் சுடரைத் துளங்காமற் றானோக்கில்
வேண்டுங் குறைமுடிக்க லாம். (58)
உள்ளத்தா லங்கி யொருங்கக் கொழுவூறில்
மெள்ளத்தான் வீடாம் விரைந்து. (59)
ஒள்ளிதா யுள்ள சுடரை யுறநோக்கில்
வெள்ளியா மாலை விளக்கு. (60)
1.7 அமுததாரணை.
அண்ணாக்குத் தன்னை யடைத்தங் கமிர் துண்ணில்
விண்ணோர்க்கு வேந்தனு மாம். (61)
ஈரெண் கலையி னிறைந்த வமிர் துண்ணில்
பூரண மாகும் பொலிந்து. (62)
ஓங்கார மான கலசத் தமிர் துண்ணில்
போங்கால மில்லை புரிந்து. (63)
ஆனகலசத் தமிர்தை யறிந் துண்ணில்
போனகம் வேண்டாமற் போம். (64)
ஊறு மமிர்தத்தை யுண்டியுறப் பார்க்கில்
கூறும் பிறப்பறுக்க லாம். (65)
ஞானவொளி விளக்கா னல்லவமிர் துண்ணில்
ஆன சிவயோகி யாம். (66)
மேலை யமிர்தை விலங்காமற் றானுண்ணில்
காலனை வஞ்சிக்க லாம். (67)
காலன லூக்கக் கலந்தவமிர் துண்ணில்
ஞான மதுவா நயந்து. (68)
எல்லையி லின்னமிர்த முண்டாங் கினிதிருக்கில்
தொல்லை முதலொளியே யாம். (69)
நிலாமண்டபத்தி னிறைந்த வமிர் துண்ணில்
உலாவலா மந்தரத்தின் மேல். (70)
1.8 அர்ச்சனை.
மண்டலங்கண் மூன்று மருவ வுடனிருத்தி
அண்டரனை யர்ச்சிக்கு மாறு. (71)
ஆசனத்தைக் கட்டி யரன்றன்னை யர்ச்சித்துப்
பூசனைசெய் துள்ளே புணர். (72)
உள்ளமே பீட முணர்வே சிவலிங்கந்
தெள்ளிய ரர்ச்சிக்கு மாறு. (73)
ஆதாரத் துள்ளே யறிந்து சிவனுருவைப்
பேதமற வர்ச்சிக்கு மாறு. (74)
பூரித் திருந்து புணர்ந்து சிவனுருவைப்
பாரித்தங் கர்ச்சிக்கு மாறு. (75)
விளக்குறு சிந்தையான் மெய்ப்பொருளைக் கண்டு
துளக்கற வர்ச்சிக்கு மாறு. (76)
பிண்டத்தி னுள்ளே பேரா திறைவனைக்
கண்டுதா னர்ச்சிக்கு மாறு. (77)
மந்திரங்க ளெல்லா மயங்காம லுண்ணினைந்து
முந்தரனை யர்ச்சிக்கு மாறு. (78)
பேராக் கருத்தினாற் பிண்டத்தி னுண்ணினைந்
தாராதனை செய்யு மாறு. (79)
உள்ளத்தி னுள்ளே யுறப்பார்த்தங் கொண்சுடரை
மெள்ளத்தா னர்ச்சிக்கு மாறு. (80)
1.9 உள்ளுணர்தல்.
எண்ணிலி யூழி தவஞ்செய்திங் கீசனை
உண்ணிலைமை பெற்ற துணர்வு. (81)
பல்லூழி காலம் பயின்றரனை யர்ச்சித்து
நல்லுணர்வு பெற்ற நலம். (82)
எண்ணற் கரிய வருந்தவத்தா லன்றே
நண்ணப் படுமுணர்வு தான். (83)
முன்னைப் பிறப்பின் முயன்ற தவத்தினால்
பின்னைப் பெறுமுணர்வு தான். (84)
காயக் கிலேச முணர்ந்த பயனன்றே
ஓயா வுணர்வு பெறல். (85)
பண்டைப் பிறவிப் பயனாந் தவத்தினால்
கண்டங் குணர்வு பெறல். (86)
பேராத் தவத்தின் பயனாம் பிறப்பின்மை
ஆராய்ந் துணர்வு பெறின். (87)
ஞானத்தா லாய வுடம்பின் பயனன்றே
மோனத்தா லாய வுணர்வு. (88)
ஆதியோ டொன்று மறிவைப் பெறுவதுதான்
நீதியாற் செய்த தவம். (89)
காடுமலையுங் கருதித் தவஞ் செய்தால்
கூடு முணர்வின் பயன். (90)
1.10 பத்தியுடைமை. பத்தியா லுள்ளே பரிந்தரனைத் தானோக்கில்
முத்திக்கு மூல மது. (91)
பாடியு மாடியும் பல்காலும் நேசித்துத்
தேடுஞ் சிவ சிந்தையால். (92)
அன்பா லழுது மலறியு மாள்வானை
யென்புருகி யுள்ளே நினை. (93)
பூசனை செய்து புகழ்ந்து மனங்கூர்ந்து
நேசத்தா லீசனைத்தேடு. (94)
கண்ணா லுறப்பார்த்துக் காதலாற் றானோக்கில்
உண்ணுமே யீச னொளி. (95)
நல்லானைப் பூசித்து நாதனென வுருகில்
நில்லாதோ வீச னிலை. (96)
அடியார்க் கடியரா யன்புருகித் தம்முள்
படியொன்றிப் பார்த்துக் கொளல். (97)
ஈசனெனக் கருதி யெல்லா வுயிர்களையும்
நேசத்தால் நீநினைந்து கொள். (98)
மெய்ம்மயிர் கூர விதிர்ப்புற்று வேர்த்தெழுந்து
பொய்ம்மையி லீசனைப் போற்று. (99)
செறிந்தறிந்து நாடிச் செவ்விதா யுள்ளே
அறிந்தரனை யாய்ந்து கொளல். (100)
வீட்டுநெறிப்பால் முற்றிற்று.