🙏நரஸிம்ம அவதாரத்தின் சிறப்புகள்🙏
அதர்வண வேதம் ரொம்ப அழகாகச் சொல்கிறது - நரசிம்ஹ அவதாரத்தை 'எலக்ட்ரிசிடி' என்கிறது. அது ஒரு கரண்ட். வித்யுத் சக்தி. கரண்டைத் தொட்டோமானால் கெட்டியாகப் பிடித்துக் கொண்டுவிடும் நம்மை! நரசிம்ஹனுக்கும் அடித்த கை பிடித்த பெருமாள் என்று பெயர்.
தன்னை அடித்த ஹிரண்யனின் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு விட்டார் எம்பெருமான். மற்றொரு கையால் சிரஸை – சிகையைக் – கெட்டியாகப் பிடித்துக் கொண்டாராம்.
ஏன் அவ்வாறு கெட்டியாகப் பிடித்துக் கொண்டான் என்று கேட்டால், அந்தப் பிடி மூலமாகவே தன் பலத்தைக் காட்டினாராம் பரமாத்மா. ‘’இந்த முட்டாள் நம்மோடு சண்டை போடுகிறானே! இந்த ஒரு பிடியே ம்ருத்யு பிடியாக இருக்கிறதே என்று விழுந்து சரணாகதி பண்ணுகிறானா பார்ப்போம்’ என்ற எண்ணத்துடன் ஹிரண்யகசிபுவின் சிரஸைப் பிடித்தானாம். ‘சரணாகதி பண்ணினால் இவனை மன்னித்து விட்டு விடுவோம்’ என்று நினைத்தாராம்.
பகவானுக்கு எவ்வளவு காருண்யம் பாருங்கள்!
இவ்வளவு உக்கிரமாகத் தோன்றியவனுக்கே இத்தனை காருண்யம் என்றால், சாந்தமாகத் தோன்றுகிறவனிட்த்திலே எவ்வளவு காருண்யத்தை நாம் பார்க்கலாம்!
அவ்வளவு உக்கிரமாக வருகிறார் பரமாத்மா!
அவர் வரக் கூடிய வேகத்தைச் சொல்லும் போது ‘மேகம் எப்படிப் போகிறதோ அப்படி வேகமாகச் செயல் பட்டான்’ என்று வர்ணிக்கப்பட்டிருக்கிற்து.
அப்படி வேகமாகப் பாய்ந்து வந்தவன் ஹிரண்யனை ஒரு பிடி பிடித்து விட்டான்.
அப்போதாவது வழிக்கு வருகிறானா என்று பார்ப்பதற்கு.
அப்புறம் தான் அவனை முடித்தார்.
அளந்து இட்ட தூணை அவன் தட்ட, ஆங்கே வளர்ந்திட்டு வால் உகிர்ச் சிங்க உருவாய் உளந்தொட்டு, இரணியன் ஒண்மார்வு அகலம் பிளந்திட்ட கைகளால் சப்பாணி பேய் முலை உண்டானே சப்பாணி என்கிறார் பெரியாழ்வார்.
அளந்திட்ட தூண்! அவனே – ஹிரண்யனே – அளந்து இட்ட தூணாம். அது வேறு இடத்தைச் சொன்னால், ஏற்கனவே வந்து புகுந்து கொண்டு உட்கார்ந்திருப்பான் என்று, தானே பக்கத்திலிருந்து தேர்ந்தெடுத்தானாம் தூணை. தானே கட்டிய தூணைத் தேர்ந்தெடுத்தானாம்.
எப்பேர்ப்பட்ட தூண் அது…? தங்கச் செங்கல் வைத்துக் கட்டிய தூண். அந்தத் தூணைத் தட்டியதும் தோன்றினான் நரசிம்ஹன்.
ஹிரண்யனோடு சண்டை போட்டார். பலத்தைக் காட்டினார். அப்புறம் மடியிலே படுக்க வைத்துக் கொண்டு அவனை உளந் தொட்டான்.
அதாவது ஹ்ருதயத்தையும் தொட்டுப் பார்த்தான் பரமாத்மா! இத்தனை நாள் நம்மோடு சண்டை போட்டது, நம்மை வைது(திட்டி), நம்மைத் தூற்றியதெல்லாம் ஹ்ருதயத்தளவிலா இல்லாவிட்டால் வாயளவிலா?. வாயளவிலானால் விட்டு விடுவோம். ஹ்ருதயத்தளவில் இருந்தால் அவனை முடிப்போம். அப்போதும் பரீட்சை பண்ணிப் பார்க்கிறான் பகவான்.
ஹ்ருதயத்தளவில் எதிர்ப்பு இருந்ததால்தான் ஹிரண்யனை அவன் முடித்தான்.
எத்தனை காருண்யம் அவனுக்கு!. இறுதி வரைக்கும் அவனிடத்தில் சரணாகதி பண்ண நமக்குச் சந்தர்ப்பம் தருகிறான்.
ஸ்ரீ நரசிம்மன் திருவடிகளே சரணம் !!!!