பெரியவா சரணம்
காஞ்சிபுரத்தில் சர்வ தீர்த்தம் என்ற இடத்தில் பெரியவா ஒரு சமயம் இருந்தார். கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து தரிசனம் பண்ணிக் கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு ஏழை விவசாயி ஒருவர் பஸ் செலவுக்குக் கூட காசில்லாமல் பாத யாத்திரையாக நடந்தே பெரியவா தரிசிக்க வந்தார். வெறுங்கையோடு எப்படி பெரியவாவைப் பார்ப்பது? அதனால் எட்டணாவிற்கு இரண்டு வாழைப்பழம் வாங்கிக் கொண்டு தரிசிக்க வந்தார்.
பெரிய பெரிய தட்டுகளில் எதை எதையோ நிரப்பி வந்து சுவாமிகளுக்கு அர்ப்பணிக்க காத்துக் கொண்டிருக்கும் பக்தர்களை பார்த்தார் விவசாயி. அவருக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. ‘இதைக் கொண்டு போய் எப்படி கொடுப்பது’ என்று தயங்கினார்.
மேலும் நந்தனாரைப் போல தன் ஜாதியை நினைத்து வருந்தினார். அருகில் போய் தரிசனம் பண்ண முடியாதே என ஏங்கினார். ஒதுங்கி நின்றார்.
சுவாமிகள் வெளியே வந்தார். பெருஞ்செல்வர்களை ஒதுக்கி விட்டு நேரே விவசாயிடம் வந்தார். முதல் தரிசனமே அவருக்குத் தான். இதை எதிர்பார்க்காததால் கை காலெல்லாம் அவருக்கு நடுங்கியது. பெரியவாளோ, “நீ யார்? எங்கேருந்து வரே? எப்படி வந்தே?” என்றெல்லாம் கேட்டு அறிகிறார்.
“உனக்கு என்ன வேணுமப்பா?” என்று அன்பொழுக கேட்கிறார் ஆச்சார்யப் பெருமகன். “ஊரில் எனக்குக் கொஞ்சம் நிலம் இருக்கு. ஊரார் தகராறு செய்து என் நிலத்துக்கு மட்டும் தண்ணீர் விடாமல் தடுக்கிறார்கள். பயிர் பண்ண முடியல. குடும்பம் பட்டினியால் வாடுது. சாமி தான் அனுக்கிரகம் பண்ணணும்!” என்று பணிந்து நிற்கிறார் அந்த ஏழை.
அதைக் கேட்டுக் கொண்ட பிறகு, “அது என்ன கையில்” என்று கேட்டு தன் கையால் வாழைப்பழங்களை வாங்கிக் கொண்டார். பிரசாதம் எடுத்து வரச் சொன்னார். பணமும் தரச் சொன்னார். “போய் வா! எல்லாம் சரியாகி விடும்” என்று ஆசி கூறி அனுப்பி வைத்தார் கருணை தெய்வம் நம் பெரியவா.