ஓரைகள்

ஓரை
ஓரை என்பது சூரிய உதயத்தில் இருந்து கணக்கிடப்படுகிறது. அந்த நாளின் கிழமை அதன் முதல் ஓரையாக கொள்ளப்படுகிறது. உதாரணமாக ஞாயிறு காலை முதல் ஒரு மணி நேரம் (6-7 மணி) சூரியனின் ஓரை.

இதையடுத்து 7-8 மணி வரை சுக்கிரன் ஓரை, 8-9 மணி வரை புதன் ஓரை, 9-10 வரை சந்திரன் ஓரை, 10-11 வரை சனி ஓரை, 11-12 மணி வரை குரு ஓரை, 12-1 மணி வரை செவ்வாய் ஓரை. இதையடுத்து மீண்டும் சூரியன் ஓரை துவங்கும்.

இதேபோல் செவ்வாய்க்கிழமை என்றால் அன்று காலை 6 முதல் 7 மணி வரை செவ்வாய் ஒரை, புதன் கிழமை என்றால் காலை 6-7 மணி வரை புதன் ஓரை, அதன் பின் ஒவ்வொரு மணி நேரமும் மேலே கூறப்பட்டுள்ள வரிசைப்படி ஓரை கணக்கிடப்படும்.

பொதுவாக காலை 6 மணி என்பதனை சராசரி சூரிய உதய நேரமாகக் கொண்டுதான் ஓரைகள் கணக்கிடப்படுகின்றன.

ஏழு கிரகங்களுக்கு மட்டுமே ஓரை உண்டு. ராகு, கேது சாயா கிரகங்கள் என்பதாலும், அவற்றிற்கு சுற்றுப்பாதை இல்லாத காரணத்தாலும் அவற்றிற்கு ஓரை கிடையாது என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

பூமத்திய ரேகை, தீர்க்க ரேகை ஆகியவற்றை நமது முன்னோர்கள் எப்படி உருவாக்கினார்களோ அதேபோல்தான் ஓரைகளும் உருவாக்கப்பட்டன. எந்தக்கிழமை துவங்கிறதோ (புதன்கிழமை என்றால் புதன் ஓரை, வெள்ளி என்றால் சுக்கிரன் ஓரை) அதற்குரிய கிரகத்தின் ஓரை முதல் ஒரு மணி நேரமாகக் கொள்ளப்படுகிறது.

இவற்றில் சுக்கிரன் ஓரை, புதன் ஓரை, குரு ஓரை ஆகிய மூன்றும் நல்ல ஓரைகள் எனப்படுகிறது. வளர்பிறை காலத்தில் சந்திரன் ஓரையும் நல்ஓரையாகவே கருதப்படுகிறது. இந்த ஓரைகளில் திருமணம், சீமந்தம், குழந்தைகளுக்கு மொட்டையடித்து காது குத்துதல், பெண் பார்ப்பது, பதவியேற்பது, வேலைக்கு விண்ணப்பிப்பது, வங்கி கணக்கு துவங்குதல் ஆகியற்றை மேற்கொள்ளலாம்.

இதில் சனி ஓரை ஒரு சில விடயங்களுக்கு நன்றான பலனைத் தரும். கடனை அடைப்பதற்கு ஏற்ற ஓரையாக சனி ஓரை கருதப்படுகிறது. உதாரணமாக சனி ஓரையில் ஒருவர் தனது கடனை அடைத்தால், அவர் மீண்டும் கடன் வாங்குவதற்கான சூழல் ஏற்படாது என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

இதேபோல் பழைய பாக்கி/கணக்குகளை தீர்ப்பது, ஊழ்வினை (பூர்வ ஜென்மப் பாவம்) தீர்ப்பது, நடைபயணம் துவங்குவது, மரக்கன்று நடுதல், விருட்சங்கள் அமைத்தல், அணைக்கட்டு நிர்மாணிக்கும் பணிகளை துவக்குவது போன்றவற்றிற்கு சனி ஓரை சிறப்பானது.

சூரியன் ஓரையில் அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள், வழக்கு தொடர்பான விடயங்கள் மேற்கொள்ள சிறப்பானதாக இருக்கும்.

நிலம் வாங்குவது, விற்பது, அக்ரிமென்ட் போடுவது, சகோதர/பங்காளி பிரச்சனைகள், சொத்து பிரித்தல், உயில் எழுதுவது, ரத்த தானம், உறுப்பு தானம், மருத்துவ உதவிகள் செய்வது இவற்றையெல்லாம் செவ்வாய் ஓரை மேற்கொள்ளலாம். இந்த ஓரையில் ஆயுதப் பிரயோகத்தை துவங்கினால் சக்தி வாய்ந்ததாக இருக்கும்.

வளைகுடா போர் கூட செவ்வாய் ஓரையில்தான் துவங்கப்பட்டது. செவ்வாய் அழிவுக்கு உரிய கிரகம் என்பதாலும், அதிகாரத்தை பிரயோகம் செய்து ஒன்றை கட்டுக்குள் கொண்டு வரக் கூடியது செவ்வாய் என்பதாலும், வளைகுடாப் போர் நீண்ட காலம் நீடித்தது. இதன் காரணமாக பெரிய அழிவு ஏற்பட்டதற்கும் செவ்வாய்தான் காரணம்.