திருப்புகழ்

திருச்செந்தூர்)

ராகம் - .........; தாளம் - ......

தந்த தந்தன தானா தானா
தந்த தந்தன தானா தானா
தந்த தந்தன தானா தானா ...... தனதான

அங்கை மென்குழ லாய்வார் போலே
சந்தி நின்றய லோடே போவா
ரன்பு கொண்டிட நீரோ போறீ ...... ரறியீரோ

அன்று வந்தொரு நாள்நீர் போனீர்
பின்பு கண்டறி யோநா மீதே
அன்று மின்றுமொர் போதோ போகா ...... துயில்வாரா

எங்க ளந்தரம் வேறா ரோர்வார்
பண்டு தந்தது போதா தோமே
லின்று தந்துற வோதா னீதே ...... னிதுபோதா

திங்கு நின்றதென் வீடே வா஡ண
ரென்றி ணங்கிகள் மாயா லீலா
இன்ப சிங்கியில் வீணே வீழா ...... தருள்வாயே

மங்கு லின்புறு வானாய் வானு஡
டன்ற ரும்பிய காலாய் நீள்கால்
மண்டு றும்பகை நீறா வீறா ...... எரிதீயாய்

வந்தி ரைந்தெழு நீராய் நீர்சூழ்
அம்ப ரம்புனை பாராய் பாரேழ்
மண்ட லம்புகழ் நீயாய் நானாய் ...... மலரோனாய்

உங்கள் சங்கரர் தாமாய் நாமார்
அண்ட பந்திகள் தாமாய் வானாய்
ஒன்றி னுங்கடை தோயா மாயோன் ...... மருகோனே

ஒண்த டம்பொழில் நநடுர் கேர்டுர்
செந்தி லம்பதி வாழ்வே வாழ்வோர்
உண்ட நெஞ்சறி தேனே வானோர் ...... பெருமாளே.

பாடல் 22 (திருச்செந்தூர்)

ராகம் - ஹிந்தோளம்; தாளம் - அங்கதாளம் (7) (கண்ட ஜாதி ரூபகம்)

தக-1, தகிட-1 1/2, தகிட-1 1/2, தக-1, தக திமி-2

தந்தன தனந்தனந் தனதனத்
தந்தன தனந்தனந் தனதனத்
தந்தன தனந்தனந் தனதனத் ...... தனதான

அந்தகன் வருந்தினம் பிறகிடச்
சந்ததமும் வந்துகண் டரிவையர்க்
கன்புருகு சங்கதந் தவிரமுக் ...... குணமாள

அந்திபக லென்றிரண் டையுமொழித்
திந்திரிய சஞ்சலங் களையறுத்
தம்புய பதங்களின் பெருமையைக் ...... கவிபாடிச்

செந்திலை யுணர்ந்துணர்ந் துணர்வுறக்
கந்தனை யறிந்தறிந் தறிவினிற்
சென்றுசெரு குந்தடந் தெளிதரத் ...... தணியாத

சிந்தையு மவிழ்ந்தழிந் துரையொழித்
தென்செய லழிந்தழிந் தழியமெய்ச்
சிந்தைவர என்றுநின் தெரிசனைப் ...... படுவேனோ

கொந்தவிழ் சரண்சரண் சரணெனக்
கும்பிடு புரந்தரன் பதிபெறக்
குஞ்சரி குயம்புயம் பெறஅரக் ...... கருமாளக்

குன்றிடிய அம்பொனின் திருவரைக்
கிண்கிணி கிணின்கிணின் கிணினெனக்
குண்டல மசைந்திளங் குழைகளிற் ...... ப்ரபைவீசத்

தந்தன தனந்தனந் தனவெனச்
செஞ்சிறு சதங்கைகொஞ் சிடமணித்
தண்டைகள் கலின்கலின் கலினெனத் ...... திருவான

சங்கரி மனங்குழைந் துருகமுத்
தந்தர வருஞ்செழுந் தளர்நடைச்
சந்ததி சகந்தொழுஞ் சரவணப் ...... பெருமாளே.

பாடல் 23 (திருச்செந்தூர்)
ராகம் - கல்யாணி; தாளம் - அங்கதாளம் (9) (கண்ட ஜாதி த்ருபுடை)

தகதகிட-2 1/2, தகதகிட-2 1/2, தகதிமி-2, தகதிமி-2

தனதனன தனதனன தந்தத் தந்தத்
தனதனன தனதனன தந்தத் தந்தத்
தனதனன தனதனன தந்தத் தந்தத் ...... தனதான

அமுதுததி விடமுமிழு செங்கட் டிங்கட்
பகவினொளிர் வெளிறெயிறு துஞ்சற் குஞ்சித்
தலையுமுடை யவனரவ தண்டச் சண்டச் ...... சமனோலை

அதுவருகு மளவிலுயி ரங்கிட் டிங்குப்
பறைதிமிலை திமிர்தமிகு தம்பட் டம்பற்
கரையவுற வினரலற உந்திச் சந்தித் ...... தெருவூடே

எமதுபொரு ளெனுமருளை யின்றிக் குன்றிப்
பிளவளவு தினையளவு பங்கிட் டுண்கைக்
கிளையுமுது வசைதவிர இன்றைக் கன்றைக் ...... கெனநாடா

திடுக்கடி தெனுமுணர்வு பொன்றிக் கொண்டிட்
டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுட் டுண்டுட்
டெனவகலு நெறிகருதி நெஞ்சத் தஞ்சிப் ...... பகிராதோ

குமுதபதி வகிரமுது சிந்தச் சிந்தச்
சரணபரி புரசுருதி கொஞ்சக் கொஞ்சக்
குடிலசடை பவுரிகொடு தொங்கப் பங்கிற் ...... கொடியாடக்

குலதடினி அசையஇசை பொங்கப் பொங்கக்
கழலதிர டெகுடெகுட டெங்கட் டெங்கத்
தொகுகுகுகு தொகுகுகுகு தொங்கத் தொங்கத் ...... தொகுதீதோ

திமிதமென முழவொலிமு ழங்கச் செங்கைத்
தமருகம ததிர்சதியொ டன்பர்க் கின்பத்
திறமுதவு பரதகுரு வந்திக் குஞ்சற் ...... குருநாதா

திரளுமணி தரளமுயர் தெங்கிற் றங்கிப்
புரளஎறி திரைமகர சங்கத் துங்கத்
திமிரசல நிதிதழுவு செந்திற் கந்தப் ...... பெருமாளே.

பாடல் 24 (திருச்செந்தூர்)
ராகம் - .........; தாளம் - ......

தந்தத் தனனத் தந்தத் தனனத்
தந்தத் தனனத் ...... தனதானா

அம்பொத் தவிழித் தந்தக் கலகத்
தஞ்சிக் கமலக் ...... கணையாலே

அன்றிற் குமனற் றென்றற் குமிளைத்
தந்திப் பொழுதிற் ...... பிறையாலே

எம்பொற் கொடிமற் றுன்பக் கலனற்
றின்பக் கலவித் ...... துயரானாள்

என்பெற் றுலகிற் பெண்பெற் றவருக்
கின்பப் புலியுற் ...... றிடலாமோ

கொம்புக் கரிபட் டஞ்சப் பதுமக்
கொங்கைக் குறவிக் ...... கினியோனே

கொன்றைச் சடையற் கொன்றைத் தெரியக்
கொஞ்சித் தமிழைப் ...... பகர்வோனே

செம்பொற் சிகரப் பைம்பொற் கிரியைச்
சிந்தக் கறுவிப் ...... பொரும்வேலா

செஞ்சொற் புலவர்க் கன்புற் றதிருச்
செந்திற் குமரப் ...... பெருமாளே.

பாடல் 25 (திருச்செந்தூர்)
ராகம் - புன்னாக வராளி; தாளம் - அங்கதாளம் (24)

தகதகிட-2 1/2, தகிடதகதிமி-3 1/2,
தகதகிட-2 1/2, தகிடதகதிமி-3 1/2,
தகதகிட-2 1/2, தகிடதகதிமி-3 1/2,
தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3

தனதனன தான தானன தனதனன தான தானன
தனதனன தான தானன தந்தத் தந்தத் ...... தனதான

அருணமணி மேவு பூஷித ம்ருகமத படீர லேபன
அபிநவ விசால பூரண
அம்பொற் கும்பத் ...... தனமோதி

அளிகுலவு மாதர் லீலையின் முழுகியபி ஷேக மீதென
அறவுமுற வாடி நீடிய
அங்கைக் கொங்கைக் ...... கிதமாகி

இருணிறைய மோதி மாலிகை சருவி யுறவான வேளையி
லிழைகலைய மாத ரார்வழி
யின்புற் றன்புற் ...... றழியாநீள்

இரவுபகல் மோக னாகியெ படியில்மடி யாமல் யானுமுன்
இணையடிகள் பாடி வாழஎ
னெஞ்சிற் செஞ்சொற் ...... றருவாயே

தருணமணி யாட ராவணி குடிலசடி லாதி யோதிய
சதுர்மறையி னாதி யாகிய
சங்கத் துங்கக் ...... குழையாளர்

தருமுருக மேக சாயலர் தமரமக ராழி சூழ்புவி
தனைமுழுதும் வாரி யேயமு
துண்டிட் டண்டர்க் ...... கருள்கூரும்

செருமுதலி மேவு மாவலி யதிமதக போல மாமலை
தெளிவினுடன் மூல மேயென
முந்தச் சிந்தித் ...... தருள்மாயன்

திருமருக சூரன் மார்பொடு சிலையுருவ வேலை யேவிய
ஜெயசரவ ணாம னோகர
செந்திற் கந்தப் ...... பெருமாளே.