இரண்டு மூலவர்கள் அருளும் பனங்காடு


பனங்காட்டு ஈஸ்வரர் கோவில், திருவன்பார்த்தான் பனங்காட்டுர்
( தற்போது திருப்பனங்காடு என்று வழங்குகிறது )

இறைவன் பெயர் :தாளபுரீஸ்வரர் (பனங்காட்டீஸ்வரர்),  கிருபாபுரீஸ்வரர் என இரண்டு மூலவர்கள்.
இறைவி பெயர் : அமிர்தவல்லி, கிருபாநாயகி


கோவில் சிறப்பு :
* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* தேவாரம் பாடல் பெற்ற தொண்டைநாட்டு தலங்களில்
 241 வது தேவாரத்தலம் ஆகும்.


காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 7 கி.மி. வந்தவாசி சாலையிலில் செல்ல, ஐயன்குளம் கூட்டுசாலை வரும். அதில் வலதுபுறம் திரும்பி சுமார் 7 கி.மி. நேராக செல்ல, திருப்பனங்காட்டூர் குறுக்கு சாலை சந்திப்பு வரும். அதில் வலதுபுறம் திரும்பி சுமார் 2 கி.மி. சென்றால் திருப்பனங்காடு கிராமம் வரும். சற்றே கடந்து செல்ல ஆலயம் வரும். காஞ்சிபுரத்தில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.

ஆலய முகவரி : அருள்மிகு தாளபுரீஸ்வரர் திருக்கோவில்
திருப்பனங்காடு அஞ்சல்
வழி வெம்பாக்கம்
செய்யாறு வட்டம்
திருவண்ணாமலை மாவட்டம்
PIN - 604410




இவ்வாலயம் காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.
கோவில் அமைப்பு: கிழக்கு நோக்கி உள்ள இக்கோவிலுக்கு ராஜகோபுரம் இல்லை. முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. முகப்பு வாயில் வழியாக உள்ளே சென்றவுடன் வெளிப் பிரகாரமும் நேரே பலிபீடம், கொடிமரம், நந்தி மற்றும் அதைத் தொடர்ந்து 3 நிலை கோபுரத்துடன் உள்ள இரண்டாவது நுழைவு வாயில். இதன் வழியாக உள்ளே சென்றவுடன் நாம் எதிரில் காண்பது கிருபாநாதேஸ்வரர் சந்நிதி. வெளிப் பிரகாரத்தில் உள்ள பலிபீடம், கொடிமரம், நந்தி ஆகியவற்றின் இடதுபுறம் மற்றுமொரு பலிபீடம், கொடிமரம், நந்தி உள்ளது. இந்த இரண்டாவது கொடிமரத்தின் எதிரே ஆலயத்தின் உள் மதிலில் ஒரு சாளரம் உள்ளது. உள் பிரகாரத்தில் கிருபாநாதேஸ்வரர் சந்நிதிக்கு இடதுபுறம் தாலபுரீஸ்வரர் சந்நிதி உள்ளது. இந்த சந்நிதிக்கு எதிரில் தான் உள் மதிலில் நாம் பார்த்த சாளரம் இருக்கிறது. இரண்டு மூலவர் சந்நிதிகளும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. இரு சுவாமி சந்நிதிகளும் கஜப்பிரஷ்ட விமான அமைப்புடன் மூன்று கலசங்களுடன் விளங்குகின்றன. இரண்டு மூலவர்கள் இவ்வாலயத்தில் இருப்பதைப் போலவே இரண்டு அம்பாள் சந்நிதிகளும் இருக்கின்றன.
கயிலை மலையில் சிவன் பார்வதி கல்யாணம் நடைபெறும் சமயம் தேவர்கள் எல்லோரும் அங்கு கூடியதால் பாரம் அதிகரித்து வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்தது. அதனை சமன் செய்ய அகத்திய முனிவரை தென் திசை நோக்கிச் செல்லும் படி சிவபெருமான் பணித்தார். அதன்படி தென்திசை வந்த அகத்தியர் இத்தலத்தில் ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டார். அகத்தியர் ஸ்தாபித்து வழிபட்ட ஈசன் தாலபுரீஸ்வரர் என்ற பெயரில் இஙகு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இச்சந்நிதி துவார வாயிலின் முன்னால் ஒரு புறம் அகத்தியர் உருவமும் மறுபுறம் பனைமரமும் கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. தாலபுரீசுவரரின் கருவறையில் கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். இச்சந்நிதியில் சண்டேசுவரர் இல்லை.
அகத்திய முனிவரின் சீடரான புலத்தியர் இத்தலம் வந்தபோது தாளபுரீஸ்வரருக்கு அருகில் மற்றொரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டார். இந்த மூலவர் கிருபாநாதேஸ்வரர் என்று போற்றப்படுகிறார். கிருபாநாதேஸ்வரர் சந்நிதியிலும் துவார வாயிலின் முன்னால் ஒரு புறம் புலஸ்தியர் உருவமும் மறுபுறம் பனைமரமும் கல்லில் உள்ளன. கிருபாநாதேசுவரரின் கருவறையில் கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, மஹாவிஷ்ணு, பிரம்மா உள்ளனர். சண்டேசுவரர் தனி விமானத்துடன் உள்ளார். கிருபாநாதேசுவரர் கருவறையில் உள்ள கோஷ்ட தட்சிணாமூர்த்தி அமைப்பு அற்புதமானது. வலக்காலைத் தொங்கவிட்டு, இடக்காலை மேலே உயர்த்திக் குத்துக்காலிட்டு, சின்முத்திரை பாவத்தில் அபயகரத்துடன் வரதகரமும் கூடி அற்புதமாகக் காட்சி தருகின்றார்.
அகத்தியர் ஸ்தாபித்து வழிபட்ட தாலபுரீஸ்வர் என்கிற பனங்காட்டீசரரை முதலில் வணங்கி பிறகு தான் புலத்தியர் ஸ்தாபித்து வழிபட்ட கிருபாநாதேஸ்வரரை வணங்க வேண்டும். அதுவே இக்கோவிலில் முறை. தேவாரத்தில் குறிப்பிடப்படுவர் பனங்காட்டீசரே ஆவார்.
அகத்தியர் தான் ஸ்தாபித்த ஈசன் தாலபுரீஸ்வரருக்கு பனம்பழம் படைத்து வழிபட்டதால் பனைமரமே தலமரமாக விளங்குகிறது. இதனாலேயே இறைவன் பனங்காட்டீசர் என்றும் அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் உயிருள்ள பனைமரங்களை வெட்டுபவர்கள் தண்டனைக்கும், தோஷத்திற்கும் உள்ளாவார்கள் என்று இத்தலத்திலுள்ள கலவெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதானத் தல விருட்சமாகிய ஆதி பனை மரங்கள் இரண்டும் கோயிலுக்கு வெளியில் உள்ள கோட்டை முனீஸ்வரர் கோயிலின் பின்புறம் உள்ளன.
இரண்டு சுவாமி சந்நிதிகள் இருப்பதைப் போன்று இரண்டு அம்பிகைள் அமிர்தவல்லி, கிருபாநாயகி என்ற பெயர்களுடன் தனித்தனி சந்நிதிகளில் இவ்வாலயத்தில் வீற்றிருக்கின்றனர். அம்பாள் சந்நிதிகளை வலமாக வரும்போது பைரவர், சந்திரன் சந்நிதிகள் உள்ளன.
இக்கோயிலின் உள் மண்டபத்தில் கற்தூண்களில் மிக அரிய சிற்பங்கள் உள்ளன. அவற்றுள் சில: (1) அமிர்தவல்லி அம்பாள் சந்நிதியின் முன்புள்ள கல்தூணில் நாகலிங்கச் சிற்பம் உள்ளது. (2) உள் வாயிலுக்கு வெளியில் உள்ள ஒரு தூணில் இராமருடைய சிற்பம் உள்ளது. உள்மண்டபத்தில் கிருபாநாதேஸ்வரர் சந்நிதிக்கு முன்புள்ள ஒரு தூணில் வாலி, சுக்ரீவர் போரிடும் சிற்பம் உள்ளது. இராமர் சிற்பத்திடம் நின்று பார்த்தால் வாலி சுக்ரீவ போர்ச்சிற்பம் தெரிகிறது. ஆனால் வாலி சுக்ரீவ சிற்பத்திடம் நின்று பார்த்தால் பார்வைக்கு இராமர் சிற்பம் தெரியவில்லை. அவ்வாறு அருமையாக அமைந்துள்ளது.

சுந்தரர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது

1.  விடையின்மேல் வருவானை வேதத்தின் பொருளானை
    அடையில்அன் புடையானை யாவர்க்கும் அறியொண்ணா
    மடையில்வா ளைகள்பாயும் வன்பார்த்தான் பனங்காட்டூர்ச்
    சடையிற்கங்கை தரித்தானைச் சாராதார் சார்பென்னே.

2.  அறையும்பைங் கழலார்ப்ப அரவாட அனலேந்திப்
    பிறையுங்கங் கையுஞ்சூடிப் பெயர்ந்தாடும் பெருமானார்
    பறையுஞ்சங் கொலிஓவாப் படிறன்றன் பனங்காட்டூர்
    உறையுமெங்கள் பிரானாரை உணராதார் உணர்வென்னே.

3.  தண்ணார்மா மதிசூடித் தழல்போலுந் திருமேனிக்
    கெண்ணார்நாண் மலர்கொண்டங் கிசைந்தேத்தும் அடியார்கள்
    பண்ணார்பா டல்அறாத படிறன்றன் பனங்காட்டூர்ப்
    பெண்ணாணா யபிரானைப் பேசாதார் பேச்சென்னே.

4.  நெற்றிக்கண் ணுடையானை நீறேறுந் திருமேனிக்
    குற்றமில் குணத்தானைக் கோணாதார் மனத்தானைப்
    பற்றிப்பாம் பரையார்த்த படிறன்றன் பனங்காட்டூர்ப்
    பெற்றொன்றே றும்பிரானைப் பேசாதார் பேச்சென்னே.

5.  உரமென்னும் பொருளானை உருகிலுள் ளுறைவானைச்
    சிரமென்னுங் கலனானைச் செங்கண்மால் விடையானை
    வரம்முன்ன மருள்செய்வான் வன்பார்த்தான் பனங்காட்டூர்ப்
    பரமன்எங் கள்பிரானைப் பரவாதார் பரவென்னே.

6.  எயிலார்பொக் கம்எரித்த எண்டோ ள்முக் கண்இறைவன்
    வெயிலாய்க்காற் றெனவீசி மின்னாய்த்தீ எனநின்றான்
    மயிலார்சோ லைகள்சூழ்ந்த வன்பார்த்தான் பனங்காட்டூர்ப்
    பயில்வானுக் கடிமைக்கட் பயிலாதார் பயில்வென்னே.

7.  மெய்யன்வெண் பொடிபூசும் விகிர்தன்வே தமுதல்வன்
    கையில்மான் மழுவேந்திக் காலன்கா லம்அறுத்தான்
    பைகொள்பாம் பரையார்த்த படிறன்றன் பனங்காட்டூர்
    ஐயன்எங் கள்பிரானை அறியாதார் அறிவென்னே.

8.  வஞ்சமற்ற மனத்தாரை மறவாத பிறப்பிலியைப்
    பஞ்சிச்சீ றடியாளைப் பாகம்வைத் துகந்தானை
    மஞ்சுற்ற மணிமாட வன்பார்த்தான் பனங்காட்டூர்
    நெஞ்சத்தெங் கள்பிரானை நினையாதார் நினைவென்னே.

9.  மழையானுந் திகழ்கின்ற மலரோனென் றிருவர்தாம்
    உழையாநின் றவருள்க உயர்வானத் துயர்வானைப்
    பழையானைப் பனங்காட்டூர் பதியாகத் திகழ்கின்ற
    குழைகாதற் கடிமைக்கட் குழையாதார் குழைவென்னே.

10.  பாரூரும் பனங்காட்டூர்ப் பவளத்தின் படியானைச்
    சீரூருந் திருவாரூர்ச் சிவன்பேர்சென் னியில்வைத்த
    ஆரூரன் அடித்தொண்டன் அடியன்சொல் அடிநாய்சொல்
    ஊரூரன் உரைசெய்வார் உயர்வானத் துயர்வாரே.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் சுவாமிக்கு பனம்பழம் படைத்து வழிபட்டு அதனை சாப்பிடுகின்றனர். இவ்வாறு செய்வதால் அப்பாக்கியம் கிடைப்பதாக நம்புகின்றனர். மேலும், சுவாமியை வழிபட ஐஸ்வர்யம் உண்டாகும், கண் தொடர்பான நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. தலவிருட்சத்தை சுற்றி வந்து சிவனை வழிபட்டால் திருமண தோஷங்கள் நீங்கும் என்கிறார்கள்.

நன்றி shivatemples.com