சபரிகிரிவாசனின் தரிசனத்தைத் தேடி வரும் அடியவர்களுக்கு இளைப்பாற இடம் தருவதே தன் கடமை என உயரிய நோக்கங்களோடு ஒருவர் வாழ்ந்திருக்கிறார்.
சதாசர்வ காலமும் ஸ்ரீஐயப்பனின் திருநாமத்தையே சொல்லிக்கொண்டு, இறைத்தொண்டு செய்வதையே தனது லட்சியமாக, பிறவிப்பயனாக, பிறவிக்கடனாக நினைத்துச் செயல்பட்ட அவரின் பெயர் சுப்ரமணிய ஐயர்.
புனலூர் சுப்ரமணிய ஐயர் என்று ஆரம்பகாலத்தில் சொன்னாலும், லட்சக்கணக்கான பக்தர்கள் அவர் மேல் கொண்ட அன்பின் காரணமாக, 'புனலூர் தாத்தா’ என்றே அவரை அழைத்தனர்.
இருபது முப்பது வருடங்களாக தனக்குக் கீழ் பக்தர்கள் சிலரைக் குழுவாக அழைத்துச் செல்கிற குருசாமிகள் என அனைத்து ஐயப்ப பக்தர்களுக்குமான மிகச் சிறந்த வழிகாட்டி... புனலூர் தாத்தா.
நாகர்கோவில் பக்கம், சுசீந்திரத்துல ஆஸ்ரமம்னு ஒரு கிராமம். அதான் பூர்வீகம். வாலிபத்துல, வேலை நிமித்தமாவும் ஸ்ரீஐயப்ப ஸ்வாமி மேல கொண்ட பக்தியாலயும் அவர் புனலூருக்கு வந்து, இங்கேயே செட்டிலாயிட்டார். அதனாலேயே அவரை புனலூர் சுப்ரமணிய ஐயர்னு சொல்ல ஆரம்பிச்சாங்க. அப்புறமா, அவரோட வயதான காலத்துல, புனலூர் தாத்தா’ன்னே கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க பக்தர்கள்.
குளத்துப்புழைல ஒரு ஐயப்பன் கோயில் இருக்கு. அங்கே, ஸ்ரீபால சாஸ்தாவா ஐயப்பன் காட்சி தர்றதை நாள் முழுக்கப் பார்த்துக்கிட்டே இருக்கலாம். இந்தக் கோயிலே கதின்னு கிடப்பாராம், அவர் மனசுல ஸ்ரீஐயப்ப ஸ்வாமி முழுசுமா வியாபிக்க ஆரம்பிச்ச தருணமும் அதுதான்.
குளத்துப்புழைல வீடு கட்டினார். அங்கே ஸ்ரீபால சாஸ்தாவைத் தரிசனம் பண்ண வர்ற பக்தர்களுக்கு உணவும், தங்கறதுக்கு இடமும் பண்ணிக் கொடுத்தார். சித்திரை விஷுநாள்ல பார்த்தா... விடிய விடிய அன்னதானம் நடக்கும். பக்தர்கள் ரொம்ப சந்தோஷமாச் சாப்பிட்டு, மனநிறைவோட சபரிமலை நோக்கிக் கிளம்பிப் போவாங்க.
அதுக்குப் பிறகு அவர் செய்த அன்னதான சேவையால, லட்சக்கணக்கான பக்தர்கள் 'புனலூர் சாமி... புனலூர் சாமி’ன்னு கெட்டியாப் பிடிச்சுக்கிட்டாங்க.
தானம் செய்வதே சிறந்தது. அந்தத் தானங்களில் எல்லாம் சிறந்தது என்று அன்னதானத்தைச் சொல்வார்கள். பெறுபவர், 'போதும்’ என்று நிறைவு அடைவது அன்னதானத்தில்தான்! அதேபோல், ஸ்வாமி ஐயப்பனின் 108 போற்றிகளில்... 'அன்னதானப் பிரபு’ என்பதும் மிக முக்கியமானது.
சாமியே சரணம் ஐயப்பா !
சாமியே சரணம் ஐயப்பா !
சாமியே சரணம் ஐயப்பா !
நன்றி
சக்தி விகடன்