யோகம்

பிராம்மியம் (பிரா):-
இதுவும் சுபமான யோகம் தான். தியானம், யோகம் ஆகியவற்றில் நல்ல அளவில் ஈடுபாடுடையவர்கள். பிரம்ம ஞானம் அறியும் முயற்சியுடையவர்கள். ஞானிகள், யோகிகள், மகான்களின் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு அதன் மூலம் நல்ல அளவில் பயன் பெறுவார்கள். விவேகத்துடன் செயல்படுவதுடன் தியாக உணர்வும், தரும சிந்தனையும் இருக்கும். சிலர் உபாசனை மேற்கொள்வதுமுண்டு. உடல் ஷேமத்தை விரும்புபவர்களாக இருப்பதால் ஹோமம், யாகம், சமாராதனை, அன்னதானம் போன்றவைகளை செய்யக் கூடியவர்கள் எனலாம்.

ஐந்திரம் (ஐந்):-
இதுவும் சுபமான யோகம் தான். இதை சிலர் மாகேந்திரம் என்ற பெயரிலும் குறிப்பிடுவதுண்டு. இந்த யோகத்தில் பிறந்தவர்கள் காரிய வெற்றியுடையவர்கள். தீர்க்கதரிசிகள் எனலாம். ஆழ்ந்து சிந்தனை செய்பவர்கள். வரும் பொருள் உரைப்பவர்கள். சிலர் அருள்வாக்கு, ஜோதிடம் போன்றவையும் கூட இவர்களுக்கு வருவதுண்டு. நல்ல நுணுக்கமான அறிவுள்ளவர்கள். புகழ்ச்சியை விரும்புவார்கள். முன் கோபம் இருக்கும். கற்றறிந்த பண்டிதர்களையும், வேத ஞானிகளையும் மதிப்பவர்கள். நல்ல தெய்வபக்தியுடையவர்கள். தெய்வ காரியங்களை செய்வார்கள்.