ஆணவ மலத்தை அழிக்கும் சூரசம்ஹாரம்

கந்த சஷ்டி  


முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை  கொண்டாடும் ஒரு விழாவாகும். சஷ்டி என்றால் ஆறு ஆகும். ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும்.

கந்தபுராணத்தில் வரும் சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் ஆகியோர் முறையே சைவ சித்தாந்தத்தில் பேசப்படும் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களைக் குறிப்பதாகக் கருதப்படுகின்றது.
ஆன்மாவைத் துன்புறுத்தும் மலங்களின் கெடுபிடியில் இருந்து ஆன்மாவுக்கு விடுதலை அளிப்பதோடு ஆணவமலத்தின் பலத்தைக் குறைத்து அதனைத் தன் காலடியில் இறைவன் வைத்திருப்பதை உணர்த்துவதே சூர சம்காரமாகும்.

ஆணவ மலத்தின் பிடியில்  தவிக்கும் நம் துன்பங்களை போக்கும்
கந்த சஷ்டி கவசம்  பால தேவராய சுவாமிகளால் முருகப் பெருமான் மீது இயற்றப்பட்ட பாடலாகும்.
நூலின் காலம் 16ஆம் நூற்றாண்டு. இதில் எழுத்து மந்திர உச்சாடணங்கள் உள்ளன.

தேவராய சுவாமிகள் ஒரு சமயம் கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவருடைய வயிற்றுவலி தீரவில்லை. வாழ்க்கையே வெறுத்து திருச்செந்தூர் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு செந்தூர் கடற்கரைக்கு வந்தார். அப்போது கந்தசஷ்டி விழா தொடங்கும் நாள். தீவிர முருக பக்தரான தேவராய சுவாமிகள் சஷ்டி விழாவில் 6 நாட்கள் விரதம் இருந்து 6-வது நாள் தன் உயிரை போக்கி கொள்ளலாம் என்று எண்ணி முதல் நாள் விரதம் தொடங்கினார்.

கவிபாடும் திறமை பெற்று இருந்த தேவராய சுவாமிகள் முருகனின் ஆறுபடை வீடுகளுக்கும் தனித்தனியாக ஆறு கவசங்களை பாட முடிவெடுத்தார். தினம் ஒன்றாக, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படை வீட்டுக்கு உரிய கவசங்களை பாட தொடங்கினார். அவர் பாட ஆரம்பித்ததும் வயிற்றுவலி படிப்படியாக குறைய ஆரம்பித்தது. சஷ்டியின் 6-வது நாள் கவசம் பாடி முடித்ததும் வயிற்றுவலி அறவே நீங்கி விட்டது. கந்தசஷ்டி கவசம் நம்மை தீமைகளில் இருந்தும், துன்பத்தில் இருந்தும் காப்பாற்றும். அதுவும் செந்தூர் கந்தசஷ்டி கவசம் இன்று உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்களால் பாடப்பட்டு வருகிறது.

இந்தப் பாடலின் இசை வடிவம் பலரால் பாடப்பட்டுள்ளது.

கந்த சஷ்டி கவசத்தை பால தேவராய சுவாமிகள் அரங்கேற்றிய தலம் ஈரோடு அருகில் உள்ள சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.கந்த சஷ்டி கவசத்தில் வரும் ’சிரகிரி வேலவன்’ எனும் வரிகள் சென்னிமலை இறைவனைக் குறிப்பவை.

ஆணவத்தை அழித்து இனி பிறவா வரம் பெறுவோம் .

அரோகரா....!
அரோகரா....!
அரோகரா....!
முருகனுக்கு அரோகரா....!