முக்கண்ணன்


தாழ் சடையும் நீள் முடியும் ஒண் மழுவும் சக்கரமும்,
சூழ் அரவும் பொன் நாணும்தோன்றுமால் --சூழும்
திரண்டு அருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு,
இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து.

என்று  பேயாழ்வாரால் பாடல் பெற்ற கலியுக கடவுள் ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரமான நரசிம்மர் அமர்ந்துள்ள தலம்  சிங்கப்பெருமாள் கோயில்


சிங்கப்பெருமாள் கோயில் தலத்தில் நெற்றிக்கண்ணுடன் (முக்கண்ணுடன்) பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் அருள்புரிகிறார். சுமார் 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைமை வாய்ந்த ஆலயமாக கருதப்படுகிறது. நரசிம்ம அவதாரக் காலத்தில் இத்தலம், அடர்த்தியான மரங்கள் சூழ்ந்த காடாக இருந்தது. அக்காட்டில் ஜபாலி என்னும் முனிவர் தவம் செய்துவந்தார். பெருமாளை நரசிம்மராகக் காண வேண்டும் என்பது அவரது அவா. அவரது ஆசையை நிறைவு செய்யும் வகையில் நரசிம்மர் இரணியனை வதம் செய்தவுடன் உக்கிர நரசிம்மராக (கோபமூர்த்தியாக) முனிவருக்குக் காட்சி கொடுத்தார். இரணிய வதத்திற்குப்பின் இரத்தக்கறை படிந்த கரங்களை இத்தலத்திற்கு அருகிலுள்ள செங்குன்றக் குளத்தில் கழுவிய பின் இங்கு வந்ததாகக் கூறுவர். முனிவரின் ஆசைப்படி நரசிம்ம வடிவத்தோடு சிவனைப் போன்று முக்கண்ணுடன் (நெற்றிக்கண்) காட்சி கொடுத்தார் நரசிம்மர். மூலவரான நரசிம்ம மூர்த்தியின் நெற்றியிலுள்ள நாமத்தை விலக்கும் பொழுது நெற்றிக்கண்ணைத் தரிசனம் செய்யலாம்.

பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் நான்கு திருக்கரங்கள்! ஒரு கையில் சங்கும் மறு கையில் சக்கரமும் ஏந்தி, வலது கை அபயம் அளிக்க, இடது கையைத் தொடையில் வைத்துள்ளார். வலது காலை மடித்து வைத்தும் இடது காலைத் தொங்கப் போட்டுக் கொண்டும் நெற்றிக் கண்ணுடன் (த்ரிநேத்ரதாரியாய்) திருமார்பில் மகாலட்சுமியுடன் வீற்றிருந்த திருக்கோலத்தில் கிழக்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார். 1008 சுலோகங்கள் பொறித்த வெள்ளியால் செய்யப்பட்ட சஹஸ்ரநாம மாலையுடனும் அரக்கு நிற சாளக்ராம மாலையுடனும் அருள்புரிகிறார். 

மூலவர் பஞ்ச மூலிகைகளால் உருவாக்கப்பட்டதால் அபிஷேகம் கிடையாது. தாயார் அஹோபிலவல்லி, உற்சவர்- பிரகலாத வரதன், ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளியுள்ளார். தல விருட்சம்- பாரிஜாதமாகும். ஆண்டாள் மற்றும் லட்சுமி நரசிம்மருக்கு தனித்தனியாக சந்நிதிகள் உள்ளன. சந்நிதித் தெரு முனையில் அனுமாருக்கு (சிறிய திருவடி) சந்நிதி உள்ளது. 

மூலவர் குன்றுக்குள் இருப்பதால் இவ்வாலயத்தைக் குடவரைக் கோயில் என்பர். இப்பகுதி பாடலிபுத்திரம் என்றும் அழைக்கப்பட்டுள்ளது. பாடலாத்ரி என்றால் சிவந்த குன்று என்று பொருள். மூலவரை வலம் வரவேண்டுமென்றால் சிறிய குன்றினையும் சேர்த்துத்தான் வலம் வரவேண்டும். எனவே இங்கு கிரிவலம் மிகவும் விசேஷமானது.

நரசிம்ம அவதாரம் பிரதோஷ நேரத்தில் நடந்ததால் பிரதோஷ காலத்தில் நரசிம்ம பெருமாளை வழிபடுவது சிறப்பு. பௌர்ணமி, அமாவாசை, பிரதோஷம், சுவாதி, ஞாயிற்றுக்கிழமைகளில் கிரிவலம் வந்து நரசிம்மரை வழிபடுவது நல்லது. இங்குள்ள பெருமாளை வழிபட்டால் நீதிமன்ற வழக்குகள் விரைவில் அனுகூலமாக தீரும்; கடன் தொல்லைகள் அகலும்; மகப்பேறு உண்டாகும்; திருமணத்தடை நீங்கும். 

பிரார்த்தனை செய்யும் பக்தர்கள் குன்றினை ஒன்பது முறை சுற்றி வந்து வெல்லம், சுக்கு, ஏலக்காய், எலும்மிச்சம்பழச்சாறு, நீர் கலந்து தயாரிக்கப்பட்ட பானகத்தை பக்தர்களுக்கு விநியோகம் செய்து வழிபடுவர். 

இக்கோயிலில் வைகாநச ஆகம முறைப்படி வழிபாடுகள் நடைபெறுகின்றன. மேலும் இவ்வாலயத்தில் முதல் தீர்த்தம் கைங்கர்யம் மற்றும் வேதபாராயணம் அத்யாபாகம் அனைத்தும் ஸ்ரீ முதலியாண்டான் வம்சத்தாரால் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது.  

சென்னை- செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் 48 கி.மீ. தொலைவில் சிங்கப்பெருமாள் கோயில் அமைந்துள்ளது

நன்றி தினமணி