கலியுக கடவுள்


ஆழியும் சங்கும் சாபமும் 
வாளும் அடல்பெருந்தண்டும் இவ்வைந்தும் 
சூழவும் வந்து நின்றுமெய் காப்ப 
சுவணனும் சுற்றுவந்து உலாவ 
பாழிமா அனந்தன் யோகத்தில் அவன் தன் 
பணங்கள் ஆயிரங்கொடு கவிப்ப 
ஊழி ஆயிரங்கள் ஒருகணம் ஆக 
யோக நித்திரை உகந்தானை 

இன்னதன் மையனாய் இந்திரை கொழுநன் 
யோகநித்திரை செயும்காலை 
முன்னை வானவர்கள் தானவர் முனிவர் 
முதலினோர் மூண்டு எழு பயத்தால் 
என்னது ஆகுங்கொல் இவன்திரு வுள்ளம் 
என நினைந்து யாவரும் நிற்க 
அன்னவன் குணந்தான் அறிந்தன எல்லாம் 
அமரர்கோன் அறையலுற்றனனால். 

-ஒட்டக்கூத்தர்

ஒருமுதல்ஆகி, கவடுமூன்றுஆகி 
உயர்பெருஞ் சாகைகள் பலஆம் 
தருஎன நின்றாய், தலைபுலை தெரியாச் 
சமய நூல் யாவையும் தந்தாய்; 
அருவினை ஆகி அருவினைப் பயனாய் 
அருவினை அனுபவிப் பவனாய் 
அருவினை ஆக்கி, அருவினை அறுக்கும் 
அற்புதா!